இந்தியாவில் முதன்முறையாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் 16 விமானங்களை தரையிறக்கி ஒத்திகை மேற்கொள்ள இருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
பொதுவாக விமானங்கள் ஓடுதளத்தில் மட்டுமே தரையிறக்கப்படும்.
ஏதேனும் அவசரம் என்றாலோ, இல்லை பேரிடர் காலங்களிலோ மட்டும்தான் மற்ற
இடங்களில் தரையிறக்க அனுமதி வழங்கப்படும்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புப்படை அதிகாரி கார்கி மாலிக்
சின்ஹா கூறுகையில், “இந்திய விமானப்படையைச் சேர்ந்த 16 விமானங்களை ஒரே
நேரத்தில் லக்னோ - ஆக்ரா நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 24)
தரையிறக்க முடிவு செய்யப்பட்டன. இதற்காக ஒரு போக்குவரத்து விமானமும், 15
போர் விமானங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஏ.என்-32 ரக
போக்குவரத்து விமானம், 6 எஸ்.யூ-30 ரக விமானங்கள், 3 ஜாக்குவார் ரக
விமானங்கள் மற்றும் 6 மிராஜ் 2000 ரக விமானங்களும் உள்ளன.
இதில் சி-130 ரக விமானத்தில் விமானப்படை கமாண்டோக்கள்
எதிரிகளின் எல்லைக்குள் தரையிறங்கி தாக்குதல் நடத்துவதுபோல் ஒத்திகை
நடக்கும். அதைத்தொடர்ந்து மற்ற விமானங்கள் தரையிறங்கி, பின்னர் வானில்
பறக்கும், இறுதியாக முதலில் தரையிறங்கிய கமாண்டோ விமானம் மறுபடி வானில்
பறந்ததுடன் இந்த ஒத்திகை நிறைவுபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி அருகே உள்ள யமுனா
நெடுஞ்சாலையில் மிராஜ் 2000 ரக போர் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை
பார்க்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆக்ரா - லக்னோ
நெடுஞ்சாலையில் ஆறு போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டன என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...