நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு நுங்கம்பாக்கத்தில் அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவிகள் போராட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பெண் காவலர்களைக் கொண்டு மாணவிகளை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்துகின்றனர். இதனால் போலீசாருக்கும், மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒருபக்கம் வெளியேற்றப்படுத்தப்படும் மாணவிகள் மீண்டும் வந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
ரத்து செய்... ரத்து செய்... நீட் தேர்வை ரத்து செய், வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம் என்று முழக்கமிட்டனர்.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் வந்து சமாதானப்படுத்தியதை அடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவிகளின் போராட்டத்தினால் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவிகள் பள்ளியின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...