"மாடு மேய்க்கத்தான் லாயக்குனு
சொல்லி என்னை வெளியேத்துன ஸ்கூல்லயே, கெரியர் கவுன்சலிங் கொடுக்கச்
சொல்லிச் சிறப்புப் பேச்சாளரா என்னைக் கூப்பிட்டாங்க, டிஸ்லெக்ஸியா ஒரு
நோய் அல்ல. எழுத்துகளை மெதுவாகக் கற்றுக்கொள்ளும் குறைபாடு மட்டுமே"
என்கிறார் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டு இன்று வழக்கறிஞராகவும்,
தொழிலதிபராகவும் சுழன்று கொண்டிருக்கும் ஹரீந்திரன்.
இன்று உலக எழுத்தறிவு தினம். யுனெஸ்கோ நிறுவனம், உலகில் எழுத்தறிவின்மையைப் போக்கும் எண்ணத்தில், 1965 செப்டம்பர் 8 ம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மாநாடு ஒன்றை நடத்தியது. பல நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். உலகளவில் எழுத்தறிவின்மையைப் போக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 1965 நவம்பர் 17-ம் தேதி, 'செப்டம்பர் 8
-ம் தேதி'யை உலக எழுத்தறிவு தினமாகக் கடைபிடிப்பது என
பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அடிப்படை எழுத்தறிவை போதிக்க
வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது மற்றும் சிறுவயதில் எழுத்தறிவைப் பெற
முடியாமல் போனவர்களுக்கு முறைசாராக் கல்வித் திட்டத்தின் கீழ் எழுத்தறிவைப்
போதிப்பது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எழுத்து ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியமானது. 'எண்ணும்
எழுத்தும் கண்ணெனத்தகும்' என்கிறார் ஒளவையார். ஆனால் பள்ளிக்கூடங்களில் சில
குழந்தைகள் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் தவறாகவே சொல்வார்கள்.
'D'-ஐ ' B' என்பார்கள். 'ஆ'- வை 'இ' என்பார்கள். அவர்களால் குறிப்பிட்ட
நேரத்துக்கு மேல் எழுத்துகளை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. இந்தக்
கற்றல் குறைபாட்டுக்கு 'டிஸ்லெக்ஸியா'என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள், எழுத்துகளை அடையாளம் காண முடியாமல் தடுமாறுவார்கள்
அப்படி டிஸ்லெக்ஸியாவில் பாதிக்கப்பட்டு, இவனால்
கற்றுக்கொள்ளவே முடியாது என்று நிராகரிக்கப்பட்டு, படித்த பள்ளியில்
இருந்து வெளியேற்றப்பட்டு இன்று பல பள்ளிகளிக்குச் சிறப்புப் பேச்சாளராக
சென்று கொண்டிருக்கிறார் ஹரீந்திரன்.
" 'டிஸ்லெக்ஸியா' என்பது ஒரு நோய் என்றுதான் பலரும்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. டிஸ்லெக்ஸியாவால்
பாதிக்கப்பட்டவர்கள் குறைவான கற்றல் திறன் (Slow learning) உடையவர்களாக
இருப்பார்கள் அவ்வளவுதான். நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது
எழுத்துகளை வாசிக்க, எழுத மிகவும் சிரமப்படுவேன். பிறரிடம் போய் பேசக்கூட
தயங்குவேன். பெரும்பாலும் தனியாகவே இருப்பேன். அதனால் நான் படித்த
பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
பிறகு தி.நகரில், கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்காகவே நடத்தப்படும் பள்ளியில் என் பெற்றோர் என்னைச்
சேர்த்துவிட்டார்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் முறை சிறப்பாக இருந்தது.
தவறாக வாசித்தாலோ எழுதினாலோ. 'நீ மக்கு, எதுக்குமே லாயக்கு இல்லை'
என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். மிகவும் கனிவாகப் பேசி மீண்டும் மீண்டும்
சொல்லிப் புரியவைப்பார்கள். அதனால் பத்தாம் வகுப்பில் 80 சதவிகிதத்துக்கும்
மேல் மதிப்பெண் பெற்றேன் . இன்று பி.காம், பி.எல் முடித்து விட்டு
வழக்கறிஞராக இருக்கிறேன். அதுபோக, ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறேன்.
என்னிடம் 100 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். அதுபோக பல பள்ளி,
கல்லூரிகளில் கேரியர் கவுன்சலிங் கொடுக்கிறேன். டிஸ்லெக்ஸியாவால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயாளியாகக் கருதாமல் அவர்களைச் சரியாக ட்யூன்
செய்தால் வழக்கமான மனிதர்களை விட சிறப்பாக உருவாவார்கள்.
'டிஸ்லெக்ஸியா' -வால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்
திறனுடையவர்கள். அவர்களால் குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல்
இருக்கமுடியாது. ஒரே வேலையைச் செய்ய விரும்ப மாட்டார்கள். டிஸ்லெக்ஸியாவால்
பாதிக்கப்பட்ட பலர் இன்று இசையமைப்பாளராக, சவுண்ட் இன்ஜினீயர்களாக,
பத்திரிக்கையாளர்களாக, எப் 3 ரேஸர்களாக இருக்கிறார்கள்... "என்கிறார்
அவர்..
"கற்றல் குறைபாடு மரபு வழியாக ஏற்படலாம். நரம்பியல் சார்ந்தும், உளவியல் சார்ந்தும் ஏற்படலாம். இதை வருமுன்னே தடுக்க முடியாது. ஆறு வயதுக்கு மேல்தான் தெரிய வரும். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது போன்று கற்றுக் கொடுக்க முடியாது. 'மல்டி சென்சரி' (Multi sensory) அணுகுமுறையில் கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதாவது, கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, கையால் தொட்டு
உணரவைத்துக் கற்றுக் கொடுக்கும் முறைக்கு 'மல்டி சென்சரி' என்று பெயர்.
இம்முறைப்படி, கற்றுக் கொடுத்தால், எளிதில் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
முன்பு, குழந்தைகளின் விரல் பிடித்து மணலிலோ அரிசியிலோ எழுதக்
கற்றுத் தருவார்கள். இதற்கு, `நுண் நரம்பியல் பயிற்சிகள்’ என்று பெயர்.
டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த முறைப்படி கற்றுத்தர
வேண்டும். இந்தக் குழந்தைகளை மேம்படுத்துவதில் பெற்றோர்களின் பங்கும்
ஆசிரியர்களின் பங்கும் மிக முக்கியமானது.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம்
உள்ள தனித்திறன்களைக் கண்டறிய வேண்டும். அத்திறன்களை மேம்படுத்துவதற்கான
பயிற்சிகளை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அடிக்கடி
உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இது
அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் பாதுகாப்பு உணர்வைத் தரும்.
பள்ளிகளில் யாருக்கேனும் இதுபோன்ற குறைபாடு இருப்பதைக்
கண்டறிந்தால், ஆசிரியர்கள் உடனே அக்குழந்தையின் பெற்றோருக்குத் தெரிவிக்க
வேண்டும். மற்ற மாணவர்களுக்கு முன்னால் அவர்களை ஒப்பிட்டுப் பேசக்கூடாது.
அவர்களைச் சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அன்போடும்,
பக்குவமாகவும் சொல்லிக் கொடுத்தால், இதற்கான சிறப்புப் பள்ளிகளே
தேவைப்படாது..." என்கிறார் மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சிறப்புப்
பயிற்சியாளர் ஹரிணி மோகன்.
20-ம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன்,
லியோனார்டோ டாவின்சி மற்றும் ஓவியர்கள் பாப்லோ பிக்காசோ அலெக்சாண்டர்
கிரகாம்பெல், தாமஸ் ஆல்வா எடிசன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி,
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், எழுத்தாளர் அகதா கிரிஸ்டி,
ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்
உள்ளிட்ட பலர் இந்தக் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே.
இவர்கள் புரிந்த சாதனைகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை. கற்றல்
குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான பயிற்சியும், ஊக்கமும்
அளித்தால் சமூகத்தில் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள் என்பதில் எந்தச்
சந்தேகமும் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...