ஃபின்லாந்தில் 7 வயதுக்கு மேல்தான் பள்ளிக் குழந்தைகளின் கைகளில்
எழுதுவதற்கு எனப் பென்சில்கள் அளிக்கப்படுகின்றன என்று எப்போதோ வாசித்தேன்.
இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பது பெயருக்குத்தான் மத்திய அரசின்
பாடத்திட்டம்.
ஆனால் மாநிலத்தில் பின்பற்றப்படுவது எந்த விதமான சிலபஸ் என்றே
பெற்றோர்களுக்கு இன்னமும் புரிந்தபாடில்லை. இன்று சென்னையில் சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தின் கீழ் பல பள்ளிகள் செயல்படுகின்றன. அத்தனை பள்ளிகளும்
பின்பற்றுவது சிபிஎஸ்இ சிலபஸைத்தான் என்றால், ஏன் ஒவ்வொரு பள்ளியிலும்
பாடங்கள் வெவ்வேறு விதமாக இருக்க வேண்டும்.
சில பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகளிலேயே 1 முதல் 150 வரை எண்களை
மனப்பாடம் செய்யச் சொல்லி அடையாளம் காண்பிக்கச் சொல்கிறார்கள். சில
பள்ளிகளில் யூகேஜி மாணவர்கள் 1 முதல் 50 வரை எண்களை, எழுத்தில் எழுதிக்
காட்ட வேண்டுமாம். அதாவது ONE, TWO, THREE, FOUR, FIVE, SIX, SEVEN, EIGHT,
என FIFTY வரை. யூ.கே.ஜி பருவத்தில் குழந்தைகள் இந்த எண்களை மனனம் செய்து
மனதில் நிறுத்திக் கொள்வதையாவது சகித்துக் கொள்ளலாம். ஆனால் எழுதவேறு
வேண்டும் என்கிறார்கள். 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு இது ஒருவிதமான
சுமையின்றி வேறென்ன? முதலில் அந்தக் குழந்தைகளின் விரல்களில் அதற்கான
பலமுண்டா என்று யோசிக்க வேண்டும். விளையும்போதே பயிர்களை உடனடி
மரங்களாக்கும் முயற்சிதான் இது!
எண்களை மட்டுமல்ல சில பள்ளிகளில் த்ரீ லெட்டர் வேர்ட்ஸ் என்ற பெயரில்
குட்டிக் குட்டி சொற்களையும்கூட யூகேஜி வகுப்புகளுக்கான தேர்வுகளில் எழுதச்
சொல்கிறார்கள். இவை எல்லாவற்றையும்விட இன்னொரு சோகம் என்னவென்றால்,
ஃபோனிக்ஸ் கற்பித்தல் முறை. பெரும்பாலான அம்மாக்களுக்கு ஃபோனிக்ஸ் முறையில்
கற்பித்தல் என்றால் என்னவென்றே விளங்குவதில்லை. வகுப்பு ஆசிரியைகளிடம்
கேட்டால், நீங்கள் இணையத்தில் தேடிப் பாருங்கள் யூடியூபில் நிறைய
வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக் கொடுத்து பிராக்டிஸ்
எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். அப்போதுதான் தேர்வு சமயத்தில் எளிதாக
இருக்கும் என்கிறார்கள். அந்த ஆசிரியைகளைச் சொல்லியும் பலனில்லை.
அவர்களும்தான் என்ன செய்வார்கள்?!
ஆனால், இவ்விஷயத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்ட முறைப்படி
வீட்டில் கற்பிப்பது எப்படி? என்று வருடத் துவக்கத்திலேயே மாதம் ஒருமுறையோ
அல்லது மும்முறையோ நீங்களே பெற்றோருக்கும் சேர்த்து பயிற்சி வகுப்புகள்
ஏதாவது நடத்தினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்! ஏனென்றால், இன்று
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பேறு கொண்ட குழந்தைகள் அத்தனை
பேரின் அம்மாக்களும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்து வெளிவந்தவர்கள் அல்ல.
அவர்களில், கிராமத்துப் பள்ளிகளில் ஆங்கில இலக்கண வாடையே தெரியாமல்
படித்து, திக்கி, முக்கித் திணறி நகர வாழ்க்கைக்குள் வந்து, தாங்கள் அடைந்த
துயரம் தங்களது பிள்ளைகளும் அடையக் கூடாது என்ற நோக்கில், தரமான
கல்விக்காக உங்கள் பள்ளிகளில் தம் வாரிசுகளைச் சேர்த்துவிட்டு, உங்கள்
கற்பித்தல் முறையை விளங்கிக்கொள்ள முடியாமல் விழி பிதுங்கி நிற்பவர்களும்
பலர் இருக்கலாம்.
அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிரதிநிதியாக புருசோத்தமன் என்பவர் சென்னை உயர்
நீதிமன்றத்தில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு
பாடச்சுமை அதிகம் எனக் கூறி, அதைக் குறைக்கச் சொல்லிக் கோரி ஒரு மனுவை
தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன்,
குழந்தைகள் விளையாட வேண்டிய வயதில் அவர்களைப் பாடங்களால் திணறடித்து
மெளனிகளாக்கி துன்பப்படுத்துகிறோம். அவர்களது பாடச்சுமை குறைக்கப்பட
வேண்டும். புருசோத்தமனின் கோரிக்கை குறித்து சிபிஎஸ்இயும், மத்திய அரசும்
உடனடியாகப் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்.
பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்.
வாரமொருமுறைகூட விளையாட அனுமதிக்கப்படாமல், அப்படியே அனுமதி இருந்தாலும்
அது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டாக இல்லாமல் பன்னிஸ் என்ற பெயரிலோ,
ஸ்கவுட் என்ற பெயரிலோ மணிக்கணக்காக வெயிலில் நிற்க வைக்கப்படும்
கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பள்ளிக் குழந்தைகளின் சோகம், இவரது
உத்தரவின் மூலமாகவாவது தீர்ந்தால் சரி!
தரமான கல்வி என்றால் கஷ்டப்பட்டுத்தான் பயில வேண்டும் என்று யாராவது
சொல்லிவிடாதீர்கள். இதைவிடக் கடினமான பாடத்திட்டங்களைக்கூட செயல்முறையில்
மிக எளிதாக்கி தங்கள் மாணவர்களுக்குக் கற்பித்து சாதனையாளர்களாக்கும்
நாடுகளும் இந்த உலகில்தான் இருக்கின்றன. அங்கிருந்து ஒலிம்பிக்கில் தங்க
மெடல் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களைப் பற்றி நீங்கள்
அறியாமலிருக்க முடியாது.
முதலில் உங்கள் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பிக்கும் பெற்றோர்கள்,
தங்களுக்கு பாடத்திட்டத்தில் ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் என்று உங்களை
அணுகினால், எல்லோரிடமும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் தேடுங்கள் என்ற
பதிலைச் சொல்லி வாயை மூடாமல், குறைந்தபட்சம் எல்லாப் பெற்றோர்களுக்கும்
மாதம் ஒருமுறையாவது பாடத்திட்டம் குறித்த சந்தேக நிவர்த்திக்கு பயிற்சி
வகுப்புகள் நடத்தப் பாருங்கள். பெற்றோர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...