கர்நாடகா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை அனைத்து
மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு கல்வி இன்றியமையாத ஒன்று. மேற்குநாடுகளில் பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின் தங்கியுள்ளது. பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் வறுமை குறையும். கலாச்சார மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு கல்வி அளிப்பது குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க காங்கிரஸ் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் அனைத்து பெண்களுக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை ஆகும் கல்விச்செலவை அரசே ஏற்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான இலவச கல்வி திட்டம் அடுத்த ஆண்டு அமலாகும். இத்திட்டத்தின் கீழ் மாணவிகள் முதலில் கல்விக்கட்டணங்களைச் செலுத்திவிட வேண்டும். பின்னர், அரசு அந்த கட்டணங்களை மாணவிகளுக்கு முழுமையாக திருப்பி வழங்கும். இந்த இலவச கல்வி திட்டத்தில் தேர்வுக் கட்டணங்கள் அடங்காது.
இதுகுறித்து, உயர் கல்வி அமைச்சர் பசவராஜ் ரெயரேடி, ‘இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தபடும். அதன்மூலம், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு குறைவாக உள்ள 18 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி ரூபாய் வரை அரசு செலவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தெலுங்கானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களும் இதேபோன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. தெலுங்கானா எல்.கே.ஜி முதல் முதுகலை பட்டதாரிகள் வரை அனைத்து மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்தது. பஞ்சாப் மாநிலம் பிஎச்.டி வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்தது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...