ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் ரூ.7,500 ஊதியம் என்ற
அடிப்படையில் தாற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பள்ளிக் கல்வித்
துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர்
சி.கதிரவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
பா.பாலகிருஷ்ணா ரெட்டி, கே.அசோக்குமார் எம்.பி., சி.வி.ராஜேந்திரன்
எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:
கல்வியில் பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக
மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மலை
கிராமங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ரூ.7,500
ஊதியத்தில் தாற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். நீட் தேர்வுக்கு
விலக்கு அளிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இயற்கை
வளங்களைப் பாதுகாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். இதற்காக தமிழக அரசு
முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நீட் போன்ற தேர்வுக்காக தமிழ்நாட்டில் இனி எந்த உயிரும் போக விட மாட்டோம்.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட்
வகுப்புகள் தொடங்கப்படும்.
ரூ.432 கோடி மதிப்பில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் கணினி
மையமாக்கப்படும். கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு அவர்களின்
குறைகளைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் 3,336 முதுகலை
ஆசிரியர்கள், 748 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றார்
அவர்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகிறார் பள்ளி கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...