அரசுப் பள்ளி வேலையை ராஜினாமா செய்தது தியாகமல்ல, ஆசிரியராக அது என் கடமை என நீட் தேர்வை எதிர்த்தும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தன் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியர் சபரிமாலா கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர் சபரிமாலா, அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் நீட் தேர்வை எதிர்த்தும் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
அவர் 'ஒன் இந்தியா'வுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: ''அனிதாவின் மரணத்துக்குப் பிறகு என்னால் உறங்க முடியவில்லை. ஒரு நேரம் நிம்மதியாக உண்ணமுடியவில்லை. என் மனசாட்சியை உறங்க வைக்கவாவது நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையில் தான் இப்போராட்டத்தில் குதித்தேன்.
அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாதா? இது அனிதாக்களின் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டு மொத்த தேசத்தின் கல்வி பிரச்சனை. பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு கல்வி மறுக்கப்படும் பிரச்சனை. அதற்கு தர்மத்தின் படி ஆசிரியர்கள் தான், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் வெகுண்டெழுந்து போராட வேண்டும்.
அரசு ஆசிரியர்கள் தான் போராட வேண்டும்
ஆனால், நம் ஆசிரியர்கள் என்ன செய்துகொண்டுள்ளார்கள்? சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்த தேதி குறித்துக் கொண்டுள்ளார்கள். ஆகையால் நான் தன்னெழுச்சியாக இப்போராட்டத்தில் தன்னந்தனியளாக போராடுகிறேன்.
கல்வி நம் உரிமை
வேலையை ராஜினாமா செய்ததற்கு நான் கவலைப்படவில்லை. கல்வி நம் உரிமை. அதற்காக போராட இந்த அரசு வேலைதான் தடை என்றால் அதை ராஜினாமா செய்வதுதானே முறை.
தீர்க்கமான முடிவு
இந்த முடிவை நான் எந்த நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை. என் கணவருடனும் குடும்பத்தாருடனும் பேசி, யோசித்து, தீர்க்கமாக எடுத்த முடிவுதான் இந்த ராஜினாமா. அதற்காக நான் ஒருபோதும் வருத்தப்பட மாட்டேன்.
பெரிய மாற்றமே நம் இப்போதைய தேவை
பெரிய மாற்றங்கள் நடக்க வேண்டுமானால், சிறு தியாகங்கள் மிக அவசியம். நான் வாசித்த புத்தகங்கள், மாணவர்களிடம் இத்தனை நாட்கள் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னை இந்த போராட்டத்தில் ஈடுபட வைத்தது.
பின் விளைவுகளா?
நான் ரொம்ப பாதுகாப்பாக இருந்துகொண்டு, என்னை எல்லா வழியிலும் உயர்த்திக்கொண்டு நேரம் கிடைக்கும் போது போராடுவேன் என்று சொல்வது எப்படி அறப் போராட்டமாகும்? ஆகையால் தான் துணிந்து இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளேன். இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் சந்திப்பேன்.
தேசம் முழுமைக்கும் ஒரே கல்வி... என் லட்சியம்.
இனி, தேசம் முழுவதும் ஒரே கல்வி வேண்டும் என்ற கோரிக்கையுடன் என்னால் முடிந்த அளவுக்கு கிராமங்கள் தோறும் சென்று விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்வேன். பிறந்த பிறப்புக்கு ஏதாவது அர்த்தம் வேண்டாமா?'' - இவ்வாறு ஆசிரியை சபரிமாலா கூறினார்.
வாழ்க
ReplyDeleteHands of to u mam....
ReplyDeleteவாழ்க வளமுடன்
ReplyDelete