அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் பணிக்கு வராமல், பாடம் நடத்தாமல், சம்பளம் வாங்குவதை தடுக்க, 'டிஜிட்டல்' விபர பதிவு அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை :
இவர்களுக்கு, தினசரி வருகைப் பதிவு, செயல் திறன், பணிமூப்பு, கல்வித் தகுதி, நடத்தை போன்றவற்றை கணக்கிட்டு, சலுகைகளும், விருதுகளும் வழங்கபடுகின்றன.இதில், பெரும்பாலான ஆசிரியர்கள், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் இருந்தாலும், பதிவேட்டில் வந்ததாக குறிப்பிடுவர்.
சில ஆசிரியர்கள், பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு போன்றவற்றிற்கு விண்ணப்பிக்கும் போது, தங்கள் மீதான புகார், ஒழுங்கு நடவடிக்கை விவகாரங்களை
மறைத்து விடுகின்றனர். இந்த தில்லுமுல்லுகளை தடுக்கும் வகையில், ஆசிரியர்களின் வருகைப் பதிவு மற்றும் பணி விபரங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, ஆசிரியர்களின் பணி பதிவேடு, டிஜிட்டல் எஸ்.ஆர்., எனப்படும், கணினி ஆவணமாக மாற்றப்படுகிறது.
மறைக்க முடியாது :
இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஆசிரியர்களின் பணி அனுபவம், முகவரி, வருமான வரி, கல்வித் தகுதி, 'மெமோ' மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விபரங்களை, தனித்தனியாக பதிவு செய்ய உள்ளோம். ஒரு ஆசிரியரின் பெயரை பதிவு செய்தால், அவரை பற்றிய விபரங்களை, பள்ளி அலுவலகம், மாவட்ட அதிகாரி அலுவலகம், இயக்குனரகம் மற்றும் செயலகம் என, அனைத்து இடங்களிலும் தெரிந்து கொள்ளலாம். எந்த ஆசிரியரும், பள்ளிக்கு வராமல் ஏமாற்ற முடியாது; எந்த விபரங்களையும் மறைக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆசிரியர்களை இடம் மாற்ற முடிவு
மாணவர் சேர்க்கை இல்லாத,ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை, இடமாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன.
இவற்றில், 42 அரசு உதவிபெறும் நிறுவனங்கள் உள்ளன; அவற்றில், ஒன்பது நிறுவனங்கள்
மூடப்பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளதால், அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலை இல்லை; அதனால், பல மாதங்களாக, சம்பளம் வழங்கபடவில்லை. இந்நிலையில், ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மாணவர் சேர்க்கை இல்லாத போதிலும், அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
உதவிபெறும் சிறுபான்மை ஆசிரியர் கல்வி நிறுவனங்கள், சும்மா இருக்கும் ஆசிரியர்களை, அவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.சிறுபான்மை அந்தஸ்து பெறாத நிறுவன ஆசிரியர்களை, அரசு பள்ளிகள் அல்லது மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...