முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனி இரவு 10 மணி
முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம்
சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில்களில் படுக்கை வசதிக்கு (பெர்த்) முன்பதிவு செய்த பயணிகள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்கலாம் என்ற விதிமுறை உள்ளது. அதாவது 9 மணி வரை தூங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் நெடுந்தூரம் செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகளை முன்பதிவு செய்யும் பயணிகள் இரவு, பகல் பாராமல் தூங்கி கொண்டே சென்று வருகின்றனர். இதனால் மத்தியிலும், கீழேயும் உள்ள பயணிகளுக்குள் சண்டை நிகழ்கிறது.
இந்நிலையில், முன்பதிவு செய்த பெர்த் பெட்டிகளில் தூங்குவதற்கான நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. (இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை) அதாவது உறங்கும் நேரம் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கீழ் படுக்கை வசதி மற்றும் நடுவரிசை படுக்கை முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தும். இந்த இரண்டு படுக்கைகளில் பயணம் செய்யும் பயணிகள் அதிக நேரம் தூங்கிவிட்டாலோ, எழுந்தாலோ விழித்திருக்கும் மற்ற பயணிகள் அமர்ந்து வர இடையூறு ஏற்படும். இதனால் அனுமதிக்கப்பட்ட தூங்கும் நேரத்தை குறைத்துள்ளது.
பயணிகளின் அமைதியான பயணத்தை உறுதி செய்யவும், தேவையற்ற வாக்குவாதத்தை தடுக்கவும் ரயில்வே துறை இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"அதேநேரத்தில் நோய்வாய்ப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட தூங்க வேண்டும் என கோரினால் பயணிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விதியானது படுக்கை வசதியுடன் கூடிய அனைத்து முன்பதிவு ரயில்களுக்கும் பொருந்தும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுமதியளிக்கும் நேரத்திற்கு அப்பால் தூங்கும் பயணிகளை தடுக்கும் வகையில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு (டி.டி.ஈ.) புதிய வழிகாட்டுதலுக்கான வழிமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...