ஆசிரியர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில், காலாண்டு விடுமுறையில், சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக, பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு லட்சம் பேர் வரை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதனால், பொதுத் தேர்வு எழுதும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வகுப்பு நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள், வரும் கல்வியாண்டில், மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு எழுத வேண்டும். பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். ஆனால், அரசு பள்ளிகளில், வழக்கமாக நடக்கும் வகுப்புகளும் போராட்டத்தால் முடங்கி உள்ளன. தனியார் பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. எனவே, இதே நிலை தொடர்ந்தால், அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் மட்டும் அல்ல; பிளஸ் 2 தேர்விலும் பின்தங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, காலாண்டு தேர்வு விடுமுறையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.செப்., 11ல் துவங்கிய காலாண்டு தேர்வு, 22ல் முடிகிறது; 23 - அக்.,1 வரை, விடுமுறை விடப்படுகிறது. மீண்டும், அக்., 3ல் பள்ளிகள் திறக்கப்படும். அதுவரை, பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், தினமும் அரை நாள் சிறப்பு வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...