வீடுகளில் யாரேனும் மூத்தவர்கள் இருந்தால், அடிக்கடி சில விசயங்கள் நாம் அன்றாடம் செய்வதை, அவர்கள் பக்குவமாக அவை தவறு அவற்றை செய்யக்கூடாது என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
நாம் அவர்கள் ஏதேனும் சொன்னாலே, அவையெல்லாம் நம்மீது உள்ள அக்கறையால், அவர்களின் அனுபவத்தால், சில செயல்களைத் தவிர்க்க சொல்கிறார்கள் என்று அறியாமல், வீட்டில் இவர்களோடு இதே தொந்தரவாக போய்விட்டது, என்று சலித்துக்கொள்வோம்.
கோவில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம்.!!
காரணம் :
கோவில் இல்லாத ஊர்களில், ஏன் குடியிருக்கக்கூடாது? அக்காலங்களில், கோவில்கள் மட்டுமே, ஒரு ஊரின் உயரமான கட்டிடமாக, இருக்கும். அவற்றிலும் உயரமான, தேக்கு மரத்தாலான கோவில் கொடிமரங்களின் உச்சியில், செப்புத்தகடு பொருத்தியிருப்பார்கள். கொடிமரத்தின் கீழ் சிலர் பிரார்த்தனைகளுக்காக கல் உப்பை கொட்டியிருப்பர். மழைக்காலங்களில் இடியோ, மின்னலோ அப்பகுதியை தாக்கும்போது, உயரமாக உள்ளவைகளைத் தான் முதலில் தாக்கும். அவ்வகையில் உயரமான கொடிமரம் அவற்றை தாங்கி, பூமிக்குள் அனுப்பிவிடும் ஆற்றல்வாய்ந்தது. இதன் மூலம், அந்த பகுதி இடி,மின்னல் பாதிப்புகளால் உயிரிழப்புகள் ஏற்படாமல், காக்கப்படுகிறது. கொடிமரத்தின் உச்சியில் உள்ள செப்புத்தகடுதான், அக்கால இடிதாங்கியாக செயல்பட்டது.
இதேபோலத்தான், கோவில்களில் கருவறைகள் எனும் இறைவன் சன்னதிகளின் கோபுர உச்சியில் இருக்கும் கலசத்தில் உள்ள தானியங்கள், இடி, மின்னலை ஈர்த்து, அவற்றை தன்னுள் ஏற்கும் ஆற்றல்மிக்கவை. மேலும், கோபுரங்களின் உயரங்களின் அளவில், அவை இடி, மின்னலில் இருந்து மக்களைக் காக்கும் பரப்பளவும் அதிகரிக்கும்.
எனவேதான், அக்காலங்களில், கோவிலை விட உயரமாக வீடுகள் கட்டினால், தெய்வ குற்றம் ஏற்படும் என்று மக்களை பயமுறுத்தி வைத்தார்கள். அக்காலங்களில் இடிதாங்கி என தனி பயன்பாடு இல்லாததால், மக்களை இவ்வாறு சொல்லி, இயற்கை பாதிப்புகளிலிருந்து காத்து வந்தனர். அதிக படிப்பறிவு இல்லாத மக்கள் இதுபோல, இறைவன் பெயரைச்சொன்னால் மட்டுமே, ஏற்றுக்கொள்வார்கள் என்ற காரணத்தால், பெரியோர்கள் அக்காலத்தில் இவ்வாறு சொல்லிவைத்தனர்.
பிறந்த குழந்தைகளை, புகைப்படம் எடுக்கக்கூடாது.
காரணம் :
பிறந்த குழந்தைகளை, புகைப்படம் எடுக்கக்கூடாது, மீறி எடுத்தால், குழந்தைகளின் ஆயுள் குறைந்துவிடும் என்று மக்களை பயமுறுத்தி வைத்தனர் பெரியோர்கள், ஏன்?
பத்துமாதம் தாயின் கருப்பை இருட்டில் வளரும் குழந்தை, பின்னர் தாய்மடியில் வளர்ந்து உலக நடைமுறைகளை, பகல் இரவு வேலைகளைக் கண்களால் கண்டு வளர்ந்தாலும், குழந்தைகளை நேராக சூரியனைப் பார்க்க வைப்பதில்லை, அதற்கு காரணம், பிறந்த குழந்தைகளின் கண்களில் உள்ள கருவிழியை, பார்வைத்தன்மையை, அதிக கதிர்வீச்சு கொண்ட சூரியக் கதிர்கள் பாதித்து, குழந்தைகளின் கண் பார்வையைப் செயல் இழக்கச்செய்துவிடும் என்பதால் மட்டுமே.
இயற்கை சூரிய ஒளியே, குழந்தைகளின் கண்பார்வைத்திறனை குறைக்கும் ஆற்றல்கொண்டதாக இருக்கும்போது, செயற்கை ஒளிவெள்ளம் பாய்ச்சி, அக்காலங்களில் ஸ்டுடியோக்களில் புகைப்படங்கள் எடுத்ததால், குழந்தைகளின் கவனத்தை திசைதிருப்பும் அந்த செயற்கை ஒளிக்கதிர்களை, குழந்தைகள் ஆர்வமாக காணும்போது, அவற்றால் கண்பார்வைக்குறைபாடுகள் நிச்சயம் ஏற்படும் என்றே நம் முன்னோர்கள், குழந்தைகளை இரண்டு வயது வரை, புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை.
இக்கால விஞ்ஞான வளர்ச்சிகளில், புகைப்படம் ஸ்டுடியோவில் எடுப்பதுபோய். வீடுகளில், கைபேசிகளில் குழந்தைகளின் குறும்புகளை, வீடியோக்களாக எடுக்கும் காலம் வந்துவிட்டது. ஆயினும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை, படங்கள் எடுக்காமல் இருப்பதே, சாலச்சிறந்தது, அதைவிட பிளாஷ் எனும் செயற்கை ஒளி பாய்ச்சி எடுப்பது, அறவே, கூடாது.
திருஷ்டி கழிப்பது :
புதுமணத்தம்பதிகளையோ மகப்பேறு முடிந்து குழந்தையுடன் வரும் பெண்களையோ அல்லது நீண்ட காலம் வெளியூரில் இருந்துவிட்டு வரும் உறவுகளையோ, அவர்கள் வீட்டில் நுழையுமுன், ஆரத்தி எடுத்து திருஷ்டி கழிப்பது, காலங்காலமாக, தமிழர் வாழ்வில் கடைபிடிக்கப்படும் ஒரு மரபு. இது என்ன மூடநம்பிக்கையா? இல்லை வேறு ஏதேனும் மதச்சடங்கா? இரண்டும் இல்லை, நம் முன்னோரின் அறிவியல்பூர்வமான, அற்புத விஞ்ஞான செயல்முறைதான் அது.
ஆரத்தி :
தாம்பாளம் எனப்படும் பெரிய தட்டு, மஞ்சள் சுண்ணாம்பு மற்றும் தண்ணீர். தாம்பாளத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் மஞ்சள்தூளுடன் சுண்ணாம்பை கலக்க, தண்ணீர் சிகப்பு நிறமாக மாறிவிடும், அதில் ஒரு வெற்றிலையை வைத்து, அதில் சூடம் ஏற்றி, வீட்டுக்கு வருபவர்களின் முன் அவர்களின் தலையை மூன்று முறை சுற்றிய பிறகு ஒரு ஓரமாக அந்த நீரைக்கொட்டிவிடுவதையே, திருஷ்டி கழித்தல் என்கிறோம்.
இதன் அறிவியல் விளக்கம் என்ன?
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புபவர்களுக்கு, பொது இடத்தில் காணப்படும் வியாதித்தொற்று பாதிப்புகள் உடலில் இருக்கும். இதுபோலவே, வெளியூரில் இருந்து பயணம் செய்து வருவோர் மீதும் தொற்றுக்கள் இருக்கும். இவற்றுடன் அவர்கள் வீட்டின் உள்ளே சென்றால், வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் எளிதில் பரவி, உடல் நலப்பாதிப்புகளை உண்டாக்கும் தன்மையுடையது. எனவேதான், உலகின் மிகச்சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை மற்றொரு கிருமிநாசினியான சுண்ணாம்புடன் நீரில் கலந்து, அதன்மேல் வெற்றிலையில் உள்ள சூடத்தின் தீப ஒளியை, அவர்கள் உடல் மேல் பரவலாகக் காட்டி சுற்ற, உடலில் உள்ள நச்சுக்கிருமிகள் எல்லாம், மஞ்சள் சுண்ணாம்பு கலவையுள்ள நீரின் ஆற்றலில் உள்ள அந்த தூய ஒளியின்பால் ஈர்க்கப்பட்டு, அழிந்துவிடும்.
எனவேதான், இவற்றை வெறுமனே அறிவியல் ரீதியாகச் சொன்னால், அதெல்லாம் எனக்கு எந்த பாதிப்புகளும் வராது என்று ஏற்க மறுப்பார்கள் என்றுதான், கண் திருஷ்டி நீங்க ஆரத்தி எடுப்பதாக, சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்.
பெரியவர்கள், வெறுமனே மதச்சடங்குக்காக எதையும் சொல்லிவைக்கவில்லை, அதில் எல்லாம் அரிய அறிவியல் உண்மைகளை, ஒளித்தே வைத்திருந்தார்கள் என்பதை அறிந்தால், நாம், என்ன இந்த காலத்திலும், இப்படி மூட நம்பிக்கைகள், என்று மூத்தோர் சொல்லை அவமதிக்கமாட்டோம்தானே!.
இதேபோலத்தான், தினமும் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும் அனைவரும், கை கால் முகம் கழுவிவிட்டே, அடுத்த வேலையில் ஈடுபடவேண்டும் என்றும் சொன்னார்கள். இன்றைய பள்ளிக் கல்லூரி வயது பிள்ளைகள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் வரை, எத்தனை பேர் இந்த சுத்தத்தை கடைபிடிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே!
வெறுமனே, நாட்டுக்கு "சுவாச் பாரத்", தூய்மை இந்தியா! என்று முழக்கமிட்டு வந்தால் போதுமா? முன்னோர் சொன்ன கருத்துகளில் மதிப்பு வைத்து, வீடுகளில், மனதில் சுத்தத்தை கடைபிடிக்க, வீடும், சமூகமும் நலமாகும்.
குழந்தை பிறக்கவில்லையா? அரச மரம் சுற்றி வா!
காரணம் :
இன்றைய தலைமுறை கேலி பேசும் ஒரு மூத்தோர் வாக்கு இது, குழந்தை இல்லாததற்கு மரத்தை சுற்றினால், பிறந்துவிடுமா? மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, சிகிச்சையின் மூலம் குறைகளை நிவர்த்தி செய்தால், குழந்தை பிறந்துவிடும், இதற்கு எதற்கு மரத்தை சுற்றுகிறீர்கள் என்று ஏளனம் வேறு செய்வார்கள். ஆயினும் முன்னோர் சொன்னதன் விளக்கம் இவர்கள் அறிந்தால், நிச்சயம் அப்படி சொல்லமாட்டார்கள்.
முன்னோர்கள் மரங்களை அவை தரும் நல்ல மருத்துவ குணங்களுக்காக, கடவுளாக உருவகப்படுத்தி வணங்கிவந்தார்கள். மரங்களில் உயர்வாக, மரங்களின் மன்னனாகக் கருதப்படும் மிகத்தொன்மைவாய்ந்த அரசமரத்தின் வேரில் பிரம்மாவும் மரத்தின் நடுப்பகுதியில் பெருமாளும் மரத்தின் உச்சியில் சிவபெருமானும் இருந்து அருள்பாலிப்பதாக வேதங்கள் கூறுகின்றன. ஆன்மீக ரீதியில், இந்த தெய்வ மரத்தை சுற்றி வந்தால், குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
அறிவியல் விளக்கம் என்ன?
மனிதன் சுவாசிக்க, ஆக்சிஜன் தேவை என்பது நாமறிவோம். நாம் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன் டை ஆக்சைடை அதிகம் வெளியிடுவோம். உயரிய தன்மை கொண்ட மரங்கள், மனிதன் வெளியிடும் கார்பனை உள்ளிழுத்து, அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. அந்த வகையில், அரச மரம் மிக அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் ஆற்றல் மிக்கது. காலைவேளைகளில், பெண்கள் இந்த மரத்தை சுற்றி வரும்போது, இயற்கையான ஆக்சிஜன் எனும் பிராணவாயு அவர்களின் சுவாசத்தின் வழியே, உடலில் பரவி, அவர்களின் மகப்பேறு அடையும் ஆற்றலைத் தூண்டும் சுரப்பிகளை சீர் செய்து, கருப்பையை வளமாக்கும்.
இந்த சுவாசித்தலின் மூலமே, உடல் குறைபாடுகள் நீங்கி, விரைவில் மகப்பேறு அடையும் நிலையை அடைவார்கள் என்பதே, இதன் அறிவியல் உண்மை. தற்போதைய நவீன மருத்துவ ஆய்வுகளும் இதை உறுதிசெய்கின்றன.
ஆயினும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் ஆன்மீகத்தில் இணைத்து கூறிய இந்த அறிவியல் உண்மை, வியந்து போற்றத்தக்கதல்லவா!
எனவே, நம் வீட்டுப் பெரியவர்கள் அடுத்த முறை, ஏதேனும் சொன்னால் அவற்றை காதுகொடுத்து கேட்போம்! பழம்பெருமை போற்றுவோம்!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...