“உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?” என்று கர்நாடக மந்திரியிடம் மாணவி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு:
“உங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க தயாரா?” என்று கர்நாடக மந்திரியிடம் மாணவி கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா டவுனில் உள்ள அரசு பள்ளியில்
நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்த மாநில சமூக நலத்துறை மந்திரி ஆஞ்சனேயா கலந்து
கொண்டார். அவர் பேசும் போது, மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அனைத்து
விதமான அடிப்படை வசதிகள் உள்ளதாகவும், அரசு பள்ளியில் படித்தவர்கள் நல்ல
நிலையில் இருப்பதாகவும், இதனால் பணக்காரர்கள் தங்களின் பிள்ளைகளை அரசு
பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும் என்றும் கூறினார்.
நிகழ்ச்சி முடிந்து மந்திரி ஆஞ்சனேயா மேடையில் இருந்து கீழே
இறங்கி வந்த போது, அவரை தனியார் பள்ளியில் படிக்கும் நயனா என்ற மாணவி வழி
மறித்து, “சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் எந்தவித அடிப்படை
வசதிகளும் இல்லை. இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா கவனத்திற்கு நான்
கொண்டு செல்ல முயன்றேன். ஆனால் அது முடியவில்லை. அரசு பள்ளிகளில் அடிப்படை
வசதிகள் அமைத்து கொடுப்பது பற்றி நீங்கள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம்
எடுத்து கூறுங்கள்” என்றார்.
மேலும், “மாணவ-மாணவிகள் அரசு பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து
படிக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அடிப்படை வசதிகள் இல்லாத
அரசு பள்ளிகள், கல்லூரிகளில் உங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்க
தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அமைத்து
கொடுத்தால் நானும், எங்கள் பள்ளியில் படிக்கும் 30 மாணவிகளும் இப்போதே
பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி அரசு பள்ளியில் சேர தயாராக
உள்ளோம். உடனடியாக அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க
தயாரா?” என்றும் கேட்டார்.
மாணவியின் இந்த அதிரடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல்
சிறிது திணறிய மந்திரி பின்னர் சுதாரித்துக்கொண்டு, அரசு பள்ளிகளுக்கு
விரைவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முதல்-மந்திரியிடம்
வலியுறுத்துவதாக கூறி சமாளித்து விட்டு அங்கிருந்து வேகமாக காரில் ஏறி
புறப்பட்டுச் சென்று விட்டார்.
மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும்
என்று கூறிய மந்திரியை வழிமறித்து மாணவி சரமாரியாக கேள்வி கேட்டதால் அங்கு
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...