அரசு அதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளுக்கு உயர்த்தப்படும்போதும்,
பதவி உயர்வு அளிக்கப்படும்போதும் கடைசி கட்டத்தில் அவர்கள் மீது ஊழல் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) கூறியுள்ளது. இது அரசு அதிகாரிகளுக்கு நிம்மதியளிக்கும் அறிவிப்பாக அûமைந்துள்ளது.
தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. செளதரி இது தொடர்பாகக் கூறியதாவது:
ஒரு அரசு அதிகாரியின் பதவி உயர்வு மற்றும் அவரை முக்கியப் பொறுப்பில் நியமிப்பது தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 6 மாதங்களில் அவர் மீது ஏதேனும் புகார் வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. பொதுவாக பதவி உயர்வு பெறுபவர், முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்படுபவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரிகளின் தவறான நடத்தை குறித்து புகார் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு அதிகாரிகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையம் 3 மாத காலம் வரை கால அவகாசம் எடுத்து வந்தது. அது இப்போது 3 முதல் 5 வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மீது அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு சிவிசி முதலில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அடுத்ததாக சிவிசி மற்றும் சிபிஐ ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவேதான் சற்று காலதாமதம் ஏற்பட்டு வந்தது.
சிவிசி-சிபிஐ இடையிலான தகவல் தொடர்பு மின்னணு முறையில் இல்லாமல், கடிதம் எழுதுவது, நேரில் சந்தித்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வது என்று இருந்தது. இனி, இந்த இரு முக்கியத் துறைகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதியுள்ள இ-மெயில் மூலம் அமையும். எனவே, தகவல் பரிமாற்றத்தில் காலவிரயம் தடுக்கப்படும்.
சிபிஐ-யைப் பொறுத்தவரையில் ஒரு அரசு அதிகாரி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு பணியாற்றி இருந்தாலும் அவர் குறித்து அனைத்து தகவல்களையும் பெற முடியும். எனவே இதற்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...