போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
போராட்டத்தை, கைவிடாத,ஊழியர்கள்,மீது, பாய்கிறது, 'எஸ்மா?'
'வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல; அதை, ஆயுதமாக பயன்படுத்த
கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதால், 14 ஆண்டுகளுக்குப்
பின், இந்த சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது.
தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.
'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும், பழைய ஓய்வூதிய
திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என்பது உட்பட,
பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான,
'ஜாக்டோ - ஜியோ' எழுப்பியுள்ளது. இவற்றை வலியுறுத்தி, செப்., 7முதல்,
காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் துவக்கி உள்ளது.
இந்த போராட்டத்தை தடுக்க, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோர், போராட்ட
குழுவினருடன் பேச்சு நடத்தியும், அது, தோல்வியில் முடிந்தது.பின், ஈரோடு
சென்ற முதல்வர் பழனிசாமியும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின், உயர்மட்டக்குழு
நிர்வாகிகளுடன் பேசினார்; அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.
இதற்கிடையில்,ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. திட்டமிட்டபடி,
ஒரு அணியினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வரும்படி, அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள்,
கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
அதேநேரத்தில், 'தார்மீக அடிப்படையில், வேலை நிறுத்தம் செய்வதை அடிப்படை
உரிமையாக கருத முடியாது; அதை, ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. 'வேலை
நிறுத்தத்தால், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பணிகள் பாதிக்கும்.
எதிர்ப்பை வெளி படுத்த மாற்று வழிகள் உள்ளன. வேலை நிறுத்தம், அரசு
விதிகளுக்கு முரணானது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
'உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்'
என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும்உத்தரவிட்டுள்ளது. ஆனாலும்,
போராட்டத்தை கைவிடாமல், 'சட்டப்படி வழக்கை சந்திக்க தயார்' எனக்கூறி,
சட்டக்குழுவை அமைத்துள்ளது, ஜாக்டோ - ஜியோ அமைப்பு.இதற்கிடையே, ஆசிரியர்கள்
போராட்டம் காரணமாக, இன்று துவங்கும் காலாண்டு தேர்வை நடத்துவதில் பெரும்
சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே செயல்படுத்தமுடியாத நிலை தொடர்கிறது.
அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால், அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும்
நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நீடித்தால், சட்டம் - ஒழுங்கு
பிரச்னையும் ஏற்படும் என, மத்திய, மாநில உளவுத்துறைகள்
எச்சரித்துள்ளன.அதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் படி, மத்திய
உள்துறையும், முதல்வர் பழனிசாமி அரசை வலியுறுத்தி உள்ளது.
எனவே, நிலைமையை கட்டுப்படுத்தவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும்,
2003ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, எடுத்த நடவடிக்கை போல, மீண்டும்,
'எஸ்மா, டெஸ்மா' என்ற, அத்தியாவசிய சட்டங்களின் படி, நடவடிக்கை எடுக்க
வேண்டிய நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, 'நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபடும்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்படும்' என, போலீசாரும் எச்சரித்துள்ளனர்.சென்னையில், 'நீட்'
தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் உட்பட, 26 பேர் நேற்று
கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல, ஆசிரியர்கள் மற்றும்
அரசு ஊழியர்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...