ஜாக்டோ-ஜியோ அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் நேற்று
தொடங்கியது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 7
லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில்
முடிந்தது. தொடர் வேலை நிறுத்தம் நடத்துவது தொடர்பாக ஜாக்டோ-ஜியோவில்
நிலவிய கருத்து மோதல் காரணமாக கணேசன், இளங்கோவன் தலைமையில் ஒரு அணியும்,
சுப்பிரமணி, மாயவன் தலைமையில் ஒரு அணியாகவும் ஜாக்டோ-ஜியோ பிரிந்தன.
இந்நிலையில், சுப்பிரமணி, மாயவன் தலைமையிலான அணியினர் நேற்று தொடர் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டுவர வேண்டும் என்பதில் இந்த அணியினர்
தீவிரம் காட்டி வருகின்றனர்.
நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்
மன்றம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி,
தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம் (ஜெஎஸ்ஆர்க), இடைநிலை பதிவு மூப்பு
ஆசிரியர் சங்கம் (சிஏ), தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம்,
தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம், முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் சங்கம், இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர்
முன்னேற்ற சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், அரசு ஊழியர் சங்கம்,
வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்,
சத்துணவு பணியாளர்கள் சங்கம், சமூக நல அலுவலர்கள் சங்கம், வருவாய்த்துறை
கிராம உதவியாளர்கள் சங்கம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கம்,
நிர்வாக அலுவலர்கள் சங்கம் என 60க்கும் மேற்பட்ட சங்கங்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
கடந்த 8 ஆண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வு
ஊதியம் கிடையாது என்பதால் அவர்கள் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய
வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் கணேசன் அணியில்
உள்ளவர்களும் சங்கத்தின் விதிகளை மீறி நேற்றைய வேலை நிறுத்தப்
போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் உயர்நிலை, மேனிலைப்
பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் பங்கேற்கவில்லை. அதனால் அந்த
வகை பள்ளிகள் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் 55 சதவீதம் ஆசிரியர்கள்
நேற்று பணிக்கு வரவில்லை. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 90 சதவீதம்
பேர் நேற்று பள்ளிக்கு வரவில்லை. அதனால் அந்த வகை பள்ளிகள்
பாதிக்கப்பட்டன.
தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வராததால் பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டன.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் தாலுகா
அலுவலகங்களில் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு
ஊழி்யர்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு
மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து இன்றும் மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடக்க உள்ளது. நாளை தமிழகம்
முழுவதும் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் ஒன்று திரண்டு மாபெரும்
போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை திமுகவின் சார்பில் எம்.பி.,க்கள்
ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வேலை நிறுத்த
போராட்டத்துக்கு திமுகவின் ஆதரவை தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...