''ஐந்து மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்'' என்று காட்டமாகக் கூறியுள்ள சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஜாக்டோ- ஜியோ போராட்டத்தைக்
கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக அரசு வரும் 18-ம் தேதி
பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
7-வது
ஊதிய கமிஷன் பரிந்துரையை நிறைவேற்றக் கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டம்
தொடர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,
அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும்
போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜாக்டோ- ஜியோ
போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்
வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,
போராட்டத்துக்குத் தடை விதித்ததோடு, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் நேரில்
ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு
இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கும் அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கும் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ஆசிரியர்கள் என்ன
தொழிலாளர்கள் வர்க்கத்தினரா என்று கேள்வி எழுப்பினார்.
'அரசியல் ஆதாயத்துக்காகவே ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்
செயல்படுகின்றன' என்று கூறிய நீதிபதி, எதிர்கால தலைமுறையை உருவாக்க
வேண்டியதைப் புரிந்துகொள்ளாமல், ஏன் போராட்டம் நடத்துகின்றனர் என்று
கேள்வி எழுப்பியதோடு, கல்வி, மருத்துவம், காவல்துறையில் இருப்பவர்கள்
போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் கல்வி முறையை முன்னேற்றுவதில் உயர்
நீதிமன்றம் எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் தெரிவித்தார்.
'எனக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் கருத்துத்
தெரிவித்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்' என்று எச்சரித்த
நீதிபதி, 40 ஆயிரம், 50 ஆயிரம் என ஊதியம் வாங்கிவிட்டு ஆசிரியர்கள்
போராட்டம் நடத்துகிறார்கள் என்றும், 5 மாணவருக்கு மட்டும் மருத்துவ இடம்
கிடைத்தது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும்
காட்டமாகக் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...