நாட்டில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ‘ஆட்டோமேஷன்’ எனப்படும், மனிதன் உதவியின்றி, தன்னிச்சையாக பணிகளை
மேற்கொள்ளும், ‘ரோபோ சாப்ட்வேர்’களின் ஆதிக்கம் காரணமாக,
குறைந்த
திறன் தேவைப்படும் பிரிவுகளில், 7.50 லட்சம் பேர் வேலையிழக்கும்
அபாயம் உள்ளது’ என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.எச்.எப்.எஸ்., ரிசர்ச் நிறுவனம்,இந்திய, ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில், ‘ஆட்டோமேஷன்’ தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வெளியார் மூலம் வேலையை முடித்துக்கொள்ளும், பி.பி.ஓ., சேவை துறைகளில், பல நிறுவனங்கள், ‘ஆட்டோமேஷன், ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ், மிஷின் லேர்னிங்’ போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்த, ஆர்வம் காட்டி வருகின்றன.
மனிதன் தயவின்றி, பணிகளை முடிக்கக் கூடிய இந்த தொழில்நுட்பங்களை, தகவல்களை உள்ளீடு செய்யும் சாதாரண பணி முதல், நடுத்தரமான மற்றும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய, அதிக திறன் தேவைப்படும் பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதனால், இத்தகைய பணிகளில் உள்ளோர், தன்னிச்சையாக செயல்படும், ‘ரோபோ சாப்ட்வேர்’களின் சவாலை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் எதிர்கொள்ள நேரிடும்.
‘மனிதர்களின் வேலையை பறிக்க, ‘ரோபோ’க்கள் வருகின்றன’ என, எச்சரித்து வந்த காலம் எல்லாம் போய் விட்டது;அவை, தற்போது நடைமுறைக்கு வந்து விட்டன; அடுத்த ஐந்து ஆண்டுகளில், சேவை துறையில், அவை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும். அதன்படி, இந்தியா மற்றும் அமெரிக்காவில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ., சேவை துறைகளைச் சேர்ந்த மொத்த பணியாளர்களில், 2022க்குள், 10 சதவீதம் பேர் வேலையிழக்க நேரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் மட்டும், குறைந்த திறன் தேவைப்படும் பிரிவுகளில், 7.50 லட்சம் பேர் வேலையிழப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எந்த அளவிற்கு, நிறுவனங்கள், தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்தும், ‘ரோபோ சாப்ட்வேர்’ தொழில்நுட்பங்களை புகுத்துகின்றனவோ, அந்த அளவிற்கு, மனிதர்களின் பணி வாய்ப்பு குறையும்.அதே சமயம், இந்த புதிய தொழில்நுட்பங்களால், 2022ல், நடுத்தர மற்றும் அதிக திறனுள்ள, 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அச்சம் வேண்டாம்:
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதனால், ‘ஆட்டோமேஷன்’ காரணமாக, வேலைவாய்ப்பு பறிபோகும் என, அச்சம் கொள்ள தேவையில்லை.
-அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய இணையமைச்சர்
ஆதிக்கம் செலுத்தும்:
இந்தியாவில், 69 சதவீத பணியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தன்னிச்சையாக பணிகளை செய்து முடிக்கும் சாப்ட்வேர் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், பரவலாக வாய்ப்புள்ளது.
-உலக வங்கியின், ‘டிஜிட்டல் டிவிடெண்ட்ஸ்’ ஆய்வறிக்கை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...