தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் போப் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட
அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை வியாழக்கிழமை திறந்துவைக்கிறார்
முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி.
தமிழகத்தில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 44.31 சதவீதமாக
உயர்ந்துள்ளது என, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியை தன்னாட்சிக்
கல்லூரியாக அறிவிக்கும் நிகழ்ச்சியில் வியாழக்கிழமை கலந்துகொண்டு, புதிதாக
கட்டப்பட்ட அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத்தை திறந்துவைத்து அவர்
மேலும் பேசியது:
மாணவர்கள் கல்வி, நல்லொழுக்கம், நற்குணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
2011ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றபோது உயர்கல்வி படிப்போரின்
எண்ணிக்கை 21 சதவீதமாக இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த
நடவடிக்கையால் தற்போது 44.31 சதவீதமாக உயர்ந்து, கல்வியில் சிறந்த மாநிலமாக
தமிழகம் திகழ்ந்துகொண்டிருக்கிறது.
நாட்டில் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 24.5 சதவீதமாக உள்ள நிலையில்,
அதில் தமிழகம் உயர்ந்த இடத்தில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 4 பொறியியல்
கல்லூரிகள், 16 பாலிடெக்னிக் கல்லூரிகள், 21 அரசு கலைக் கல்லூரிகள், 24
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என, மொத்தம் 65 கல்லூரிகள்
தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ. 100 கோடியில் உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு கட்டமைப்பு
வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 961 புதிய பாடப்பிரிவுகள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிட
மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணத்தை செலுத்திவருகிறது.
தொழில்நுட்பத்தில் உலகத் தரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் இதுவரை 4
லட்சத்து 20 ஆயிரத்து 851 மாணவர்- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி
வழங்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமாக கல்வியை அளிக்கும் அரசாக தமிழக அரசு
உள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளில் 68
அரசு கலைக் கல்லூரிகளில் ரூ. 210 கோடியில் புதிய வகுப்பறைகள்
கட்டப்பட்டுள்ளன என்றார் அவர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...