கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல்
செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செப்.8) வெளியிடப்பட்ட அறிவிப்பு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25
சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய
வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைகளைத் தேர்வு செய்யும் பணி முதல் கட்டமாக கடந்த மே 31-ஆம் தேதி
அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட சிலர் வராததால்
காலியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி
நேரடியாகச் சேர்க்கை வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஜூலை 29 -இல்
குழந்தைகளைத் தெரிவு செய்யும்பணி நடைபெற்றது. இதன் மூலம் 82,909 குழந்தைகள்
25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காலியாக உள்ள 41, 832 இடங்கள்: சேர்க்கைக்குப் பின் காலியாக உள்ள 41,832
இடங்களில் இணைய வழியாக விண்ணப்பிக்க செப்டம்பர் 11-ஆம் தேதி முதல்
செப்டம்பர் 25-ஆம் தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதற்கான வசதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள்
ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும்
இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றப்பட்ட
விவரம், பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் உள்ள 10,000-த்திற்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில்
சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...