ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களுக்கான
தொகை ரூ.1,136 கோடி வரும் அக். 7- ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என
உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மதுரை
செக்காணூரணியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்திற்கு ஓர்
அஞ்சல் அட்டையை அனுப்பி வைத்தார்.
அதில், ஓய்வூதியம் கிடைக்காமல் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் குடும்பத்துடன்
தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் உள்ளனர். நாங்கள் இத்தனை ஆண்டுகளாக
கஷ்டப்பட்டு உழைத்துவிட்டு வாழ்நாளின் இறுதியில் ஓய்வூதியம் கிடைக்காமல்
பசி, பட்டினியுடன் தவிக்கும் போது, அரசுக்கு ஆதரவாக எங்கள் மீது எஸ்மா
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க உங்களுக்கு எப்படி
மனம் வந்தது. அரசு தனது கடமையைச் செய்யவில்லை என்பது தெரிந்திருந்தும்
நீதிபதிகள் தொழிலாளர்களுக்கு எதிராக இப்படி ஒரு உத்தரவை எப்படிப்
பிறப்பித்தனர் என எழுதியிருந்தது.
இந்த அஞ்சல் அட்டையை சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல
வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இதன் விசாரணை வெள்ளிக்கிழமை,
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் எம்.கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய
அமர்வு முன் வந்தது. அப்போது ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப்பலன் தொகை ரூ. 1,136 கோடியும்
வரும் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அரசு தலைமை வழக்குரைஞர்
தெரிவித்தார்.
மேலும் தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை,
ஓய்வூதியப் பலன்களுக்கான தொகை ரூ. 5,000 கோடியை எப்படி வழங்குவது என்பது
குறித்த திட்ட அறிக்கையையும் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்கல் செய்வதாக அரசு
தலைமை வழக்குரைஞர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதே போல விபத்துகளில்
பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய ரூ. 300 கோடி எப்போது வழங்கப்படும்
என்பது குறித்துப் பதிலளிக்கவும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...