கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு,
பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய
மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம்.
இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரிமிலேயர்) ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது தற்போது அமலில் இருந்து வருகிற விதிமுறை ஆகும். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வு, பண வீக்க சூழலில் இந்த வரையறைக்குள் வர முடியாத நிலை உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகையை பெற்று அனுபவிக்க முடியவில்லை.
இதனால் இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த கிரிமிலேயரை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம், ஓராண்டுக்கு முன்னதாக மந்திரிசபை குறிப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அது இவ்வளவு காலமும் நிலுவையில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் உச்சவரம்பு (ஆண்டு வருமானம்) ரூ.6 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு விட்டது’’ என்று கூறினார்.
இது இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற்று அனுபவிக்க உதவியாக அமையும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீட்டின் சலுகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.
இது குறித்து ஆராய்வதற்கு ஒரு கமிஷனை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது. இது மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு ஆகும்.
இந்த கமிஷன், உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:–
* பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்து, அவற்றை வலுவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களை மேற்பார்வையிட மாற்று வழிமுறை ஒன்றை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* இந்தியா, நேபாளம் இடையே போதைப்பொருள் கடத்தலை தடுக்கிற விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் கொடுத்தது.
* மத்திய அரசின் ‘சம்பாடா’ திட்டத்தின் பெயரை, பிரதான் மந்திரி கிசான் சம்பா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) என்று மாற்றுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.
* நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பாரத் வேகன் அன்ட் என்ஜினீயரிங் கம்பெனியை மூடி விடுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது. இதன் 626 ஊழியர்கள் விருப்பு ஓய்வில் அனுப்பப்படுவர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...