கேரளாவில் போராட்டக்காரர்களின்மீது தடியடி நடத்திய துணை போலீஸ் கமிஷனரை மனித உரிமைகள் ஆணையத்தின் முன்பு துணிச்சலாக கைநீட்டி குற்றம் சாட்டிய ஏழு வயது சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஜூன் 17ஆம் தேதி கேரளாவில் உள்ள புதுவைப்பேவில் போராட்டக்காரர்களின்மீது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். இதுபற்றி விசாரணை நடத்த கேரள மாநில மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாட்சியம் அளிக்க அழைப்பு விடுத்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் போலீஸார் தாக்குதல் நடத்தியது குறித்து ஆணையம் முன்பு சாட்சியம் அளிப்பதற்காக ஆகஸ்ட் 7ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்கள் பலரும் எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் அந்த இடம் சற்று பதற்றமாகவே காணப்பட்டது.
புதுவைப்பேவில் எல்.பி.ஜி. எரிவாயு தொழிற்சாலை திறக்கப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்காக கேரளா உயர் நீதிமன்றச் சந்திப்பு பகுதியில் திரண்டிருந்தார்கள். அவர்கள்மீது கொச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் யதிஷ் சந்திரா தலைமையிலான போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தினார்கள். அன்றுதான் பிரதமர் மோடி கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்கு கொச்சி வந்திருந்தார்.
கொச்சி மாநகர துணை காவல் ஆணையர் யதிஷ் சந்திரா, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்வது எனது கடமை. அதனால்தான், தடியடி நடத்தப்பட்டது என்று இந்த தடியடி சம்பவத்தை நியாயப்படுத்தினார். போலீஸாரின் நடவடிக்கை பற்றி பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, கேரள மனித உரிமைகள் ஆணையம், காவல்துறை அதிகாரி யதிஷ் சந்திரா தடியடி சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விசாரணைதான் எர்ணாக்குளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கே தான் ஆலன் என்கிற ஏழு வயது சிறுவன் ஆணையத்தின் முன்பு துணிச்சலாக துணை போலீஸ் கமிஷனர் யதிஷ் சந்திராவை குற்றம் சாட்டிப் பேசியுள்ளான்.
மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் கமிஷன் முன்பு சாட்சியமளிக்க சிறுவன் ஆலன் குடும்பத்தினரும் மற்ற போராட்டக்காரர்களும் வந்திருந்தனர். இதில் பார்வையாளர்களும், காவல்துறை அதிகாரி யதிஷ் சந்திராவும் போராட்டக்காரர்களும் நடந்த சம்பவங்களை ஆணையத்தின் முன்பு கூறிக்கொண்டிருந்தார்கள்.
விசாரணை தொடங்கிய சிறிது நேரம் கடந்திருக்கும். யதிஷ் சந்திரா, காவல்துறை போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது என்ற குற்றச்சாட்டை மறுத்துப் பேசினார். அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக ஏழு வயது சிறுவன் ஒருவன் உள்ளே வந்து, காவல் அதிகாரி யதிஷ் சந்திராவைக் கை நீட்டி "இவர்தான் என்னை அடிச்சார். அங்கிருந்த மத்த எல்லோரையும் இவர் அடிச்சதை நான் பார்த்தேன். அடிபட்டவங்க எல்லோரையும் ஆஸ்பிட்டல்ல சேர்த்தாங்க. மறுநாள் இவருடைய போட்டோ எல்லா நியூஸ் பேப்பர்லயும் வந்துச்சு” என்று தைரியமாகப் பேசினான்.
மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மோகன்தாஸ் சிறுவன் ஆலனிடம் "இந்த போலீஸ் அதிகாரிதான் மக்களை அடித்தாரா?" என்று கேட்க,
சிறுவன் ஆலன் "ஆமாம்! எல்லோரையும் இவர்தான் அடிச்சார்” என்று திரும்ப திரும்ப கூறினான். அருகிலிருந்த, அவனுடைய அம்மா அமைதியாக இருடா என்று அவனுடைய சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தாலும் அவன் உண்மையை தைரியமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.
ஏழு வயது சிறுவனிடமிருந்து வெளிப்பட்ட இந்த எதிர்பாராத தாக்குதலால் காவல் அதிகாரி யதிஷ் சந்திரா நிலைகுலைந்து போனார். எப்படியோ சமாளித்துக்கொண்டு தன்னை இயல்பாக வைத்துக்கொண்டு சிறுவனிடம் சிரித்துக்கொண்டே நட்பான தொனியில், “நானா அடிச்சேன்? உன்னை அடிச்சது யார்டா குழந்தை! உன்னுடைய பேர் என்ன?” என்று கேட்க ஆரம்பித்தார்.
சிறுவன் ஆலனின் குறுக்கீடும் சாட்சியமும் சுருக்கமாக இருந்தது. விசாரணை ஆணையத்தையும் மீடியாவின் கேள்விகளையும் கூட அவன் சமாளித்தான்.
விசாரணையின்போது, போராட்டகாரர்களைக் கலைப்பதற்காக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது என்பதை யதிஷ் சந்திரா உறுதியாக மறுத்தார். எங்களின் நோக்கம் பிரதமர் மோடியின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் என்று கூறினார்.
போராட்டக்காரர்கள் தரப்பில் கூறுகையில், போலீஸாரால் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். சிறைவைக்கப்பட்டபோது, காவல்துறை எங்களுக்கு கழிவறை வசதிகூட செய்து கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்கள். இதை மறுத்த யதிஷ் சந்திரா, இது பொய் என்று நிரூபிக்க காவல் நிலைய சிசிடிவி கேமிரா பதிவுகள் உள்ளன என்று தெரிவித்தார்.
யதிஷ் சந்திரா கூறுகையில், “போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட பெண்களை போலீஸார் காவல் நிலையத்துக்குள் அழைத்துச் செல்லவில்லை. அவர்கள் வெளியே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். சிறுவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...