'பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல்,
மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்' என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர்.
'மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை'
பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று
நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர்
சங்கத்தினர் பேசியதாவது:
அன்னரத்னா, சென்னை அகர்வால் வித்யாலயா பள்ளி:
பாடங்கள் அதிகமாக உள்ளன; அதை குறைத்து மாணவர்களுக்கு, அழுத்தம் தராத,
மகிழ்ச்சியான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும். வெறும் சமன்பாடுகளை
மட்டும் கற்றுத் தராமல், செய்முறை பயிற்சி அளித்தால், பாடம் எளிதில்
மறக்காது. பாடங்களில் உள்ள வார்த்தைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
திறன் வளர்ப்பு, சமயோஜிதமாக சிந்தித்து பதில் அளிக்கும் முறையை மாணவர்கள்
பின்பற்ற, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களை வெறும்
புத்தகப்புழுவாக வைத்திருக்காமல், அவர்களை வண்ணத்து பூச்சிகள் போல்,
விரிவான கல்விக்கு தயாராக்க வேண்டும்.
யோகலட்சுமி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளி
:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் உள்ளது போல், தேர்வு முறையையும்,
கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும். எளிதாக புரியும் வகையில், பாடங்களை
வடிவமைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் வளர்ச்சிக்கேற்ப,
இரண்டுஆண்டுகளுக்கு ஒருமுறை, பாடத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்.
கங்கா, அரசு பள்ளி மாணவி, வேலுார்:
அனுபவங்கள் அடிப்படையிலான கல்வி அமைய வேண்டும். ஆங்கில வழியில் மாணவர்கள்
சரளமாக பேசவும், எழுதவும் கற்றுத்தர வேண்டும். வங்கி படிவம், ஆங்கிலம்
அல்லது ஹிந்தியில் தான் உள்ளது. அதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்த வேண்டும்.
மற்றவர்களின் உதவியின்றி, சுயமாக வாழ நம்பிக்கை அளிக்கும் கல்வி தேவை.
வில்லியம் விஜயராஜா, முதுநிலை ஆசிரியர், காஞ்சிபுரம்:
நவீன தொழில்நுட்பத்தை, பாடத்திட்டத்தில் இடம் பெற வைப்பது அவசியம். வேளாண்
கல்வி, பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, கம்ப்யூட்டர்
தொழில்நுட்பம் என, பல்வேறு அம்சங்கள் இடம் பெற வேண்டும். நல்லொழுக்கம்,
தொழிற்கல்வி, உடற்கல்வியை பிரிக்காமல்,கட்டாய பாடமாக சேர்க்க வேண்டும்.
பரந்தாமன், பெற்றோர் - -ஆசிரியர் கழக தலைவர், செஞ்சி:
இயற்கை வளம் குறித்த தகவல்கள், பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு பாடத் திட்டம் என, தேசிய அளவில் ஒருங்கிணைந்த
கல்வியாக ஏற்படுத்த வேண்டும். பிளஸ் 2வுக்கு கருத்தியல் தேர்வு நடத்திய
பின், செய்முறை தேர்வு நடத்த வேண்டும்.
கிருஷ்ணகுமார், ஆசிரியர், திருவள்ளூர்:
வினாத்தாள் தயாரிப்பு முறை மாற வேண்டும். தமிழ், ஆங்கில தேர்வில், இரண்டு
தாள்களை ஒன்றாக்க வேண்டும். புத்தகங்களில் இல்லாத அம்சங்களை, தேர்வில் இடம்
பெற வைத்து, 'கைடு'களை படிக்கும் நிலையை உருவாக்கக் கூடாது.
சுகபாலா, இந்திய மாணவர் சங்கம்:
பாடங்களில் ஜாதி, மதம், இன உணர்வுகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் கருத்துக்கள்
இடம் பெறக்கூடாது. அனைத்து பாடங்களும், விஞ்ஞானம் மற்றும் சரித்திர
ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். சுதந்திர போராட்டம் குறித்த
தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில், இடைச்செருகல் இன்றி உண்மையாக இருக்க
வேண்டும். இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...