பள்ளிகல்வித் துறையை குறை கூறி அறிக்கை விடுபவர்கள், அதுகுறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போது, அவருடன் சேர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையனும் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை செயலாளராக ஆறு ஆண்டுகள் இருந்த சபிதா மாற்றப்பட்டு,நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த உதயசந்திரன் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். பிறகு கல்வித்துறையில் புதிய சீருடை, 11 ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, என பல்வேறு அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக உதயசந்திரன் வேறு துறைக்கு மாற்றப்படுகிறார் என்ற தகவல் ஊடகங்களில் வெளியானது. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (ஆகஸ்ட்-6) வெளியிட்ட அறிக்கையில்,'ஆட்சியாளர்களின் ஊழலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்ற அரசு முயல்கிறது, உதயசந்திரன் மாற்றத்தால் பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட கல்வி வளர்ச்சி சார்ந்த அனைத்து பணிகளும் பாதிக்கப்படும். எனவே, இடமாற்ற முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, “கீழடியில் மத்திய அரசு செய்த தவறை பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாடு அரசு செய்யக் கூடாது” என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில் சென்னை தாம்பரத்திலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று (ஆகஸ்ட்-7) எம்.ஜி .ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இலக்கிய போட்டிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்,' மத்திய அரசு எந்த தேர்வை கொண்டுவந்தாலும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 54ஆயிரம் கேள்வி மற்றும் பதில்கள் கொண்ட சிடிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிக்கல்வித்துறை மீது தொடர்ந்து குறை கூறி அறிக்கை விடுபவர்கள், என்னிடம் அதுகுறித்து ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...