நரம்பு
மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள்
அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார்
தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள
திட்டமிட்டுள்ளனர்.
அதிகரிப்பு : பள்ளி, கல்லுாரிவகுப்புகளை, 'கட்' அடிக்கும், ஒழுங்கீன மாணவர்கள், போதை பழக்கத்துக்கு ஆளாவது அதிகரித்துள்ளது. காகிதத்தில், எழுத்தை அழிக்க பயன்படுத்தும், வெள்ளை நிற திரவ, ஒயிட்னரை, கைக்குட்டையில் தேய்த்து, நுகர்ந்து, போதை ஏற்றி, வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர். ஸ்டேஷனரி கடைகளில், 15 மி.லி., கொள்ளவு உள்ள ஒயிட்னர், குறைந்த விலைக்கு கிடைக்கிறது. இதில், ஹைட்ரோகார்பன், ஆல்கஹால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இதை அதிகம் நுகர்ந்தால், நான்கு மணி நேரமாவது போதை இருக்கும் என, கூறப்படுகிறது. நரம்பு மண்டலம், மூளை, கிட்னியை செயல் இழக்கச்செய்யும், ஒயிட்னர் போதைக்கு, சில ஆண்டுகள் முன், கோவையைச் சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர் பலியானார். ஒயிட்னர் போதைக்கு அடிமையாகும், மாணவர்களின் எண்ணிக்கை, சமீபத்தில் அதிகரித்துள்ளது. இவர்கள், 'திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்' என, போலீசார் கூறுகின்றனர்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: 'ஒயிட்னர்' போதைக்கு, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் உள்ளிட்ட இளம் தலைமுறையினர், அடிமையாகி வருகின்றனர்.
இதனால், தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு, ஒயிட்னர் விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல கடைகளில், தடையை மீறி, ஒயிட்னர் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால், உளவு போலீசார் வாயிலாக, ரகசிய கண்காணிப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, கடைகளில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அதிரடி 'ரெய்டு' : இதைத் தொடர்ந்து, தடையை மீறி, இளம் தலைமுறையினருக்கு, ஒயிட்னர் விற்கும் கடைகளில் அதிரடி, 'ரெய்டு' நடத்த உள்ளோம். இந்த குற்றச்செயலில் ஈடுபடுவோர், ஜாமினில் வெளிவராத வகையில்,இந்திய தண்டனை சட்டம், 328 பிரிவின் கீழ் கைதுசெய்யப்படுவர். மனித உடலை பாதிக்கும் என, தெரிந்தே, 'ஒயிட்னர்' விற்பனையில் ஈடுபட்டதால், அவர்களுக்கு, மூன்றில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரைதண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள்கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...