நம் கருத்தை எதிர்த்து 'இப்படிதான் எங்க ஆசிரியர்கள்
சொல்லிக்கொடுத்தாங்க. அவங்க சொல்றதுதான் கரெக்ட்'' என சொல்லி
பூரிப்படைவார்கள் குழந்தைகள். குழந்தைகள் அதிகம் நம்புவது அவர்களுடைய
ஆசிரியர்களைதான்.
முன்னரெல்லாம் ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கும் பெற்றோர்
''கண்ணு தலையைத் தவிற மத்த எடத்துல எங்க வேணும்னாலும் அடி பின்னி எடுங்க
சார்'' என்பார்கள். ஆனால் தற்போது 'ஏன் என் குழந்தையை அடிச்சீங்க'' என்கிற
அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிப்போயிருக்கிறது. இதற்கு யார் காரணம்?
யாரிடத்தில் தவறு? பேசினோம் ஆசிரியர்களிடம்.
சேலம் அரிசிபாளையம் நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையான விமலா
அப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வீடு வரை சென்று பேசக்
கூடியவர். தொடக்க நிலை
வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு உள்ள அழுத்தம் குறித்து பேசுகிறார்....
''தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் துறுதுறு குழந்தைகளைச் சாமளிக்க ஒரு
தாயின் மனநிலை வேண்டும். ஆசிரியர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்க பல
காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் புறம் ஒதுக்கிவிட்டாலே
பிரச்னைகள் குறைந்துவிடும். வகுப்பறைக்குள் நுழையும் ஒவ்வொரு ஆசிரியர்களும்
தங்கள் வீட்டில் நடந்த விஷயங்களை வீட்டிலேயே விட்டுவிட வேண்டும். அரசுப்
பள்ளிக்கு பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் குழந்தைகள் படிக்க
வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்துக்காக அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர்.
ஒரு சிலர் வீட்டுப் பிரச்னை காரணமாக பள்ளிக்கு வருவதே நின்று விடும். அப்பா
அம்மாவுக்குள் நடக்கும் பிரச்னைகளால் குடும்பம் பிரிந்து விடுகிறது.
குழந்தைகள் தாயுடன் பாட்டி வீட்டுக்கு சென்று விடுகின்றனர்.
அவர்களின் படிப்பும் பாதிக்கப்படுகிறது. அவர்களை பின் தொடர்ந்து மீண்டும்
பள்ளி வர ஊக்குவிக்கிறோம். அப்படி வந்தால் மீண்டும் முதலில் இருந்து பாடம்
நடத்த வேண்டும். வீட்டுப் பிரச்னைகளால் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு
ஆளாவதும் அதிகரித்துள்ளது. பாடம் நடத்துவதோடு அவர்களிடம் பர்சனலாகப் பேசி
தன்னம்பிக்கை அளிக்கவும் கவுன்சிலிங் கொடுக்கிறோம். தொடக்கப் பள்ளி
ஆசிரியையின் பணி தேர்ச்சி அடைய வைப்பதோடு நின்று விடுவதில்லை. அந்தக்
குழந்தை தொடர்ந்து படிக்க பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுப்பது வரை
நடக்கிறது'' என்கிறார் விமலா.
உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரியும் முரளி இது குறித்துக்
கூறுகையில், ''ஆசிரியர்களின் ஆயுட்காலத்தைப் பற்றி ஒருவர் ஆய்வு
செய்துள்ளார். பணியில் இருக்கும் போதே இறக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை
அதிகம். பணி ஓய்வு பெற்றாலும் ஆசிரியரின் ஆயுட் காலம் குறைவாகவே உள்ளது.
காரணம் அவர்கள் தங்களது பணி நாட்கள் முழுவதும் பேசிக் கொண்டே இருக்க
வேண்டும்.
இன்றைய ஆசிரியர்கள் வகுப்பறையில் சந்திக்கும் சவால்கள் அதிகம். கற்பித்தல்
என்பது குறிப்பிட்ட பாடம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதாக
இருந்தகாலத்தில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி ஆசிரியர்கள் பாடம் நடத்த
முடிந்தது. இப்போது குறிப்பிட்ட பாடத்தை எடுத்துக் கொண்டால் அதை ஒரு
மதிப்பெண் கேள்வி, பொருத்துக அல்லது விரிவான விடை என்று மதிப்பெண்
அடிப்படையில் கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எல்லோரையும் தேர்ச்சி சதவீதம் துரத்துகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு
சென்ற ஒரு மாணவனிடம் தேர்வு அறைக்குள் நுழையும் நேரத்தில் (9.55 மணிக்கு)
அவனது பிளட் பிரஷ்ஷர் செக் செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
அங்கு கண்காணிப்புப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஆசிரியர்களுக்கும்
பிளர் பிரஷர் செய்யப்பட்டது. மாணவரை விட அதிகளவு பிளட் பிரஷர் ஆசிரியரிடம்
காணப்பட்டதாம். இன்றைய ஆசிரியர்களின் நிலைமை இப்படிதான் உள்ளது.
ஆசிரியர்கள் வேலையை விரும்பிச் செய்யும் சூழல் இல்லை. மதிப்பெண்கள்
மட்டுமின்றி கல்வி அறிவுத் தேடலாக மாறும் போது தான் பிரஷர் குறையும்,''
என்கிறார் முரளி.
ஆசிரியர்கள் வகுப்பறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து
உளவியல் ஆலோசகர் பிரவீன்குமார் கூறுகையில், 'வீட்டிலிருந்து கிளம்பும்போது
என்ன பிரச்னைகளை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் எதிர்கொண்டிருக்கலாம். ஆனால்
வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டால் மாணவர்களே நலனே முதன்மையாக இருக்க
வேண்டும்.
முன்பெல்லாம் மாணவர்கள் 13 வயதைத் தொட்டால் அதை அடசலன்ட் என்பார்கள்.
தற்போது அதை 10 வயதிலிருந்தே அடசலன்ட் என்று சொல்லப்படுகிறது. இந்த வயதில்
ஈகோ பார்க்கத் தொடங்கும் மாணவர்களிடம் கண்டிப்பையோ, தண்டனையையோ
பொதுவெளியில் ஆசிரியர்கள் காட்டக் கூடாது.
தவறு செய்த மாணவனை தனியாக அழைத்துப் போய் தான் நடந்த தவறை விளக்க வேண்டும்.
சாதியைச் சொல்லி திட்டுவது, நிறத்தை காராணம் காட்டி திட்டுவது,
மற்றவர்களுடன் கம்பேர் செய்வதை மாணவர்கள் துளியும் விரும்புவதில்லை. அப்படி
செய்வதாலேயே மாணவர் தற்கொலை, தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் ஏற்பட காரணமாக
அமைகின்றன.
ஆசிரியர்களைப் பொறுத்தவரை பாடத்தை குறித்த நேரத்தில் முடிப்பது மட்டுமே
அவர்களுடைய வேலையில்லை. மாணவர்களுக்கு புரியும்படி கற்பிக்கப்படும்போதுதான்
ஆசிரியர் மீது மதிப்பு, மரியாதை ஏற்படும்.
மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு மதிப்பளித்து பதில் சொல்ல ஆசிரியர்கள்
பழக்கப்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற மாற்றங்கள் ஆசிரியர்களால்
மாணவர்களுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆசிரியர்கள் தங்களது மன
அழுத்தத்தை சமாளிப்பதற்கான பயிற்சி வகுப்புகள், உளவியல் ரீதியான
பயிற்சிகளையும் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அளிப்பதும் ஆசிரியர்களின்
டென்ஷன் குறைக்க உதவும்,'' என்கிறார் பிரவீன்குமார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...