திருப்பூர்: யூடியூப் இணையதளத்தில் ஒரே ஒரு வீடியோ அப்லோட் செய்த தமிழக மாணவர் ஒருவர் ஆறு மாதங்களில் ரூ.6.5 லட்சம் சம்பாதித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?
ஆனால் அதுதான் உண்மை.
தமிழகத்தில் கோவை அருகில் உள்ள திருப்பூர் என்ற நகரைச் சேர்ந்த கோபிநாத் என்ற 26 வயது இளைஞர் தனது தந்தையின் சமையல் கலையை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவு செய்துள்ளார். அவரே வீடியோ எடுத்து அவரே எடிட் செய்த இந்த வீடியோ உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கூகுள் ஆட்சென்ஸ் மூலம் லட்சக்கணக்கில் இந்த வாலிபருக்கு வருமானத்தைக் கொடுத்துள்ளது.
300 முட்டைகள் போட்டு குழம்பு
கோபிநாத், தனது தந்தை ஆறுமுகம் 300 முட்டைகள் போட்டு சுவையான குழம்பு வைக்கும் வீடியோவை எடுத்துள்ளார். இந்த குழம்பை தயார் செய்ய அவரது சகோதரர் மணிகண்டனும் உதவி செய்துள்ளார். இதேபோல் ஒரு முழு ஆட்டை வெட்டிக் குழம்பும் செய்யும் வீடியோவையும் எடுத்துள்ளார். இந்த இரண்டு வீடியோக்கள் இவரது வருமானத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தியுள்ளது.
42 வகை சமையல்
இதுவரை 42 வகையான சமையல் வீடியோக்களை தயார் செய்துள்ளார். இவரது வீடியோக்களை இதுவரை 30 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி 66000 பேர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும் 20 நாட்களில் மட்டும் இவரது யூடியூப் சேனலில் 50000 பேர் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
புகழ் பெற்ற வீடியோக்கள்
மாட்டுக்கறி குழம்பு, ஆட்டின் குடல் குழம்பு, இறால் குழம்பு, வாத்துக்கறி குழம்பு ஆகிய வீடியோக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறதாம்.
இயற்கையான சமையல்
கிராமிய மணத்துடன் விறகு அடுப்புகளை மட்டுமே பயன்படுத்தி இயற்கையாகவும், அதே சமயம் சுத்தமாகவும் தயார் செய்வதுதான் இவருடைய குடும்பத்தினரின் சிறப்பாம்
மாதம் லட்சம் ரூபாய் வருமானம்
கூகுள் ஆட்சென்ஸ் மூலம் முதல் மாதம் ரூ.8000 வருமானம் வந்தவுடன் முதலில் ஆச்சரியம் அடைந்த இவர், அடுத்த மாதத்தில் ரூ.45000 வருமானம் வந்தவுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தாராம். அதன்பின்னர் மூன்றாவது மாதத்தில் ரூ.1.05 லட்சமும், கடந்த மாதம் ரூ.3.10 லட்சமும் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் வருமானம் வந்துள்ளது. குறிப்பாகக் கடைசி ஒரே வாரத்தில் ரூ.2.13 லட்சம் வருமானம் வருவதற்கு இவர் தந்தை 300 முட்டைகளில் செய்த குழம்புதான் காரணமாம்.
வருமானம் வருவது மட்டும் கோபிநாத்தின் மகிழ்ச்சி இல்லையாம். இன்று அவரது தந்தையின் சமையல் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டதில்தான் அவருக்குப் பெருமையாம். ஏழ்மை நிலையில் இருந்த தனது குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற தனது கனவு தற்போது நிறைவேறிவிட்டதாகவும், மேலும் புதிய வகை வீடியோக்களை அதிகமாக உருவாக்கி தனது தந்தை புகழை மேன்மேலும் பரப்ப வேண்டும் என்பதே தனது கனவு என்றும் கோபிநாத் கூறுகிறார்.
குடும்பமே இப்போது யூடியூப் வீடியோவில்
தற்போது கோபிநாத்தின் தாயார், தங்கை ஆகியோர்களும் யூடியூப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்களாம். மேலும் தற்போது திருப்பூர், கோவை, போன்ற பகுதிகளில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் சமையல் செய்யும் படப்பிடிப்பை தகுந்த அனுமதியுடன் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.
யார் இந்த கோபிநாத்
கடந்த ஐந்து வருடங்களாகச் சென்னையில் சினிமா துறையில் போராடி வந்த கோபிநாத், ஒருசில படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளாராம். ஆனால் பணிபுரிந்த எந்தத் திரைப்படமும் வெளிவராததால் வெறுப்புடன் சொந்த ஊருக்கு திரும்பி கேபிள் டிவியில் பணிபுரிந்துள்ளார். அந்த சமயத்தில்தான் யூடியூபில் இவரது தந்தை சமையலின் வீடியோவை இவர் பதிவு செய்ய தற்போது இதுவே இவரது முழு நேர தொழிலாக மாறிவிட்டது.
இலக்கு
வாரம் ஒரு வீடியோ வீதம் யூடியூபில் பதிவு செய்து மொத்தம் 1000 வீடியோக்களை பதிவு செய்ய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் எதிர்காலத்தில் இயற்கை சமையலுடன் கூடிய மிகச்சிறந்த ஓட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்பதே இவரது விருப்பமாம்
Very good friend
ReplyDelete