மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்தலில் மிகப் பெரிய ஊழல்
முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் உரிய ஆதாரங்களுடன் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் ஆனந்த் ராய்
தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மருத்துவபடிப்பு அனுமதியில் நடைபெற்ற 'வியாபம்' ஊழல்களை
அம்பலப்படுத்தியவர் ஆனந்த் ராய். இப்போது நாடு முழுவதும் மருத்துவ
மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் மிகப் பெரிய ஊழல் முறைகேடுகள்
நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த நீட் தேர்வுகள் நடைபெற்றன. இதை ஆன்லைனில்
நடத்துவதற்கு புரோமெட்ரிக் டெஸ்ட்டிங் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தை தேசிய
தேர்வுகள் வாரியம் பயன்படுத்தி இருந்தது. சுமார் 1 லட்சம் மாணவர்கள்
இத்தேர்வை எழுதினர்.
தேர்வை ஆன்லைனில் நடத்திய நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு
சாப்ட்வேர் மூலம் வினாத்தாளை கசியவிட்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி,
நொய்டா, சண்டிகர், லக்னோ, புவனேஸ்வர், ராஞ்சி ஆகிய தேர்வு மையங்களில் இந்த
முறைகேடு நடைபெற்றிருக்கிறது.
இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி புரோமெட்ரிக் நிறுவனத்துக்கு
எதிராக அண்மையில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. ஆனால் யார்
மீதும் இதுவரை எந்த நடவடிக்கையுமே மேற்கொள்ளப்படவில்லை.
இதையடுத்துதான் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்
போவதாக ஆனந்த் ராய் தெரிவித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் விரைவில்
இந்த வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார் ஆனந்த் ராய்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...