ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத
வருமானம் ரூ.8,334க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்பட
பொருட்களும் இனிமேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்று தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் சுமார் 1 கோடியே 93 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 85 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் மூலம் 20 கிலோ
இலவச அரிசி பெறுகிறார்கள். அதேபோன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்எண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்ந்துவிட்டதால், இதுவரை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த பொருட்கள் இனி கிடைக்குமா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் (கெசட்டில்) கூறி இருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதியின்படி, கீழ்கண்ட நிலையில் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது.
* குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது.
* தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள்.
* 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள்.
* மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
* கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள்.
* ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் (மாதம் ரூ.8,300) அதிகமாக உள்ள குடும்ப அட்டைகள்.
* பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும், அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
*யார் யாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்:*
* குடிசை பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் குறைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்.
* கிராமப்பகுதியில் அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.
* அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை ேகாட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள்.
* முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள்.விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்ப தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள். 40 சதவீதத்திற்கு மிகுதியாக உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்.
* விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எந்த நேரத்திலும் ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற அறிவிப்பு வரலாம் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உளுத்தம் பருப்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுபற்றி தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதேபோன்று, மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் ஒரு வாரம் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது.
ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரும் காலங்களில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்று கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வழங்குவதிலும் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது. குடும்ப தலைவராக ஆண்களுக்கு பதில் பெண்கள் படம் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் குளறுபடிக்கு நடுவில், தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் வாங்குபவர்கள், கார், ஏ.சி. வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் இன்னும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த உத்தரவினால் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந் துள்ளனர்.
*தமிழகத்துக்கு பொருந்தாது அமைச்சர் காமராஜ் விளக்கம்*:
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை, தலைமை செயலகத்தில் அரசாணை குறித்து அவசரமாக நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு சேர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறபோது எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட பிறகுதான் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினோம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பயனும் தமிழக மக்களுக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், இலவச அரிசி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இரண்டு திட்டமும் செயல்படுத்துகிற ஒரே மாநிலம் தமிழகம்தான்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து விட்டதற்கான அரசாணைதான் கெசட்டில் வெளியிடப்பட்டது. ஆனால், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது. பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறை தொடரும். பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.
The Gazettee & minister's stt,are not exaustive. Need detailed clarification
ReplyDelete