இதுவரையில் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாழ்வதற்கே ஆதார் அவசியம் என்பது போன்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, மொபைல் எண்கள், பான் கார்டு போன்ற அனைத்துத் தனிநபர் விவரங்களையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இறப்பைப் பதிவு செய்யவும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று வருவாய்த் துறை செயலாளரான ஹஸ்முக் அதியா கூறியிருந்தார். இதுவரையில் சுமார் 111 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆகஸ்ட் 11ஆம் தேதி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரி மாநிலங்களவையில் பேசுகையில், “இன்றைய தேதி வரையில், மொத்தம் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. மாநிலம், வருடம் மற்றும் முடக்கப்பட்ட காரணம் வாரியான தகவல்கள் ஆதார் ஆணையத்தால் தயாரிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார். ஆதார் ஒழுங்குமுறைகள், 2016-ன் 27, 28 ஆகிய பிரிவுகளின் கீழ் சில காரணங்களுக்காக ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்களை முடக்க ஆதார் ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...