பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் நேற்று பள்ளிகளுக்கு செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அரசு ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து வேலைநிறுத்தம் செய்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தரையில் உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் 7-வது புதிய ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் தரவேண்டும். அதுவரை 20 சதவீத சம்பளத்தை உயர்த்தி இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் 26, 27-ந் தேதிகளில் ஆயத்த மாநாடு நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் பட்டதாரி ஆசிரியர் கழக சங்க நிறுவனர் மாயவன், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினர் பி.கே.இளமாறன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழக மகளிர் அணி பிரிவு தலைவி என்.அருணா உள்பட பலர் பேசினர்.
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லாததால் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்க தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். அரசு ஊழியர்கள் பலர் அலுவலகங்களுக்கு வராததால் பணிகள் பாதிக்கப்பட்டன. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அலுவலகங்களுக்கு சிலர் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர். இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...