Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

யானைமலை ஒத்தக்கடையில் ஓர் அதிசயம்: 502 மாணவர்களுடன் செயல்படும் அரசு ஆரம்பப் பள்ளி

மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடையில் பசுமையான சூழலில் ரம்மியமாக காணப்படும் அரசு ஆரம்பப் பள்ளி





வளாகம், பள்ளிச் சீருடையில் அணிவகுத்திருக்கும் மாணவ மாணவிகள், நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை. (உள்படம்) தலைமை ஆசிரியர் மு.தென்னவன் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தமிழ்நாட்டில் 50 மாணவர்களுக்கும் மேல் ஓர் அரசு ஆரம்பப் பள்ளி இருந்தாலே மிகப் பெரிய விஷயமாகப் பேசப்படுகிறது. 100 மாணவர்களுக்கும் மேல் செயல்படும் பள்ளிகள் அரிதாகக் காணப்படுகின்றன. இந்தச் சூழலில் மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 502 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஒவ்வொரு வகுப்பிலும் 3 பிரிவுகள் உள்ளன. ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஒரு பிரிவிலும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் இரண்டு பிரிவுகளிலும் உள்ளனர்.

பள்ளியின் பின்புலத்தில் மதுரையின் அடையாளங்களில் ஒன்றான யானைமலை வீற்றிருக் கிறது. பள்ளி வளாகம் ஏராளமான மரங்களுடன் பசுமை நிறைந்து காணப்படுகிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும் அனைத்து மாணவர்களும் சரளமாக எழுதவும், வாசிக்கவும் செய்கின்றனர். ஸ்மார்ட் வகுப்பறை உள்ளது. மாணவர்கள் தாமாகவே கம்ப்யூட்டர்களை இயக்கப் பயிற்சி பெற்றுள்ளனர்.

2015-ம் ஆண்டு இந்தப் பள்ளி யில் நடைபெற்ற திறமை சாரல் விழா, பள்ளிக்கு அதிக எண்ணிக் கையில் புதிய மாணவர்களைக் கொண்டுவந்து சேர்த்தது என்கிறார் தலைமை ஆசிரியர் மு.தென்னவன்.

அவர் மேலும் கூறியதாவது:
2010-ம் ஆண்டு இந்தப் பள்ளி யின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். பள்ளியைச் சுற்றிலும் செயல்படும் 8-க்கும் மேற்பட்ட ஆங்கிலப் பள்ளிகள் மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகள் மிக மோசமாக இருப்பது ஆகியவையே மாணவர்கள் எண் ணிக்கை குறைவதற்கான பிரதானக் காரணங்கள் எனத் தெரியவந்தது.

அருகேயுள்ள சாலையை விடப் பள்ளி வளாகம் தாழ்வாக இருந்ததால், மழை பெய்தால் சாலையிலிருந்து பள்ளி வளாகத் துக்குள் மழை நீர் புகுந்து விடும். ஆகவே, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உதவியோடு வளாகத்தின் தரைப் பகுதியை மேம்படுத்தி, அழகான கற்கள் பதித்தோம். ரோட்டரி சங்கம் மூலம் நவீனக் கழிவறை களை அமைத்தோம். அரிமா சங்க உதவியால் மேடை கட்டினோம். அரசின் தன்னிறைவுத் திட்டம் மூலம் அனைத்துக் கட்டிடங்களுக் கும் பச்சை வண்ணம் பூசி வளாகத் துக்குப் புதுப்பொலிவு கொண்டு வந்தோம். அடுத்தடுத்த ஆண்டு களில் இவ்வாறு அடிப்படை வசதி களைக் கணிசமாக மேம்படுத்தியும் கூட மாணவர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு இல்லை.

அடுத்து என்ன செய்வது எனப் பல நாட்கள் யோசித்ததன் பலனாக மாணவர்களின் திறன்களை ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்தும் நோக்கில் திறமை சாரல் விழா நடத்துவது என 2015-ம் ஆண்டு முடிவெடுத்தோம். 10-4-2015 மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்தத் திறமைத் திருவிழா இரவு 12 மணி வரை நடைபெற்றது. மொத்தம் 48 நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். 7 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது ஆசிரியர்கள் யாரும் மேடைக்குச் செல்லவேயில்லை. மொத்த நிகழ்ச்சியையும் மாணவர்களே ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு பெற்றோர் களின் கூட்டம் நடைபெற்றது. திறமை சாரல் விழாவுக்கு ஆசிரியர் களின் சொந்தப் பணம் ரூ.90 ஆயிரம் செலவு செய்திருந்தோம். மகிழ்ச்சியில் திளைத்த பெற்றோர் கள் மொத்தச் செலவுத் தொகையை யும் தந்ததோடு, கூடுதலாக ரூ.5,000 தந்தனர். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு வீடாகப் பெற்றோர்களே சென்று புதிய மாணவர்களைச் சேர்த்தனர். அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 174 புதிய மாணவர்கள் சேர்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஆங்கிலப் பள்ளிகளில் இருந்து விலகி எங்கள் பள்ளிக்கு வந்தவர்கள்.

அதேபோல் பள்ளிக்கான உதவி களும் குவிந்தன. பாரத ஸ்டேட் வங்கி சார்பிலும், பெற்றோர்கள் 4 பேரும் புதிய கம்ப்யூட்டர்கள் வாங்கித் தந்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமச் சபைக் கூட்டம் எங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்போது புதிய ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் கோரிக்கை தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது.

அதன் பலனாகவே தன்னிறை வுத் திட்டம் மூலம் 15 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை, 55 இன்ச் அளவு கொண்ட 3 எல்இடி டிவி, 16 மின் விசிறிகள் போன்றவை பள்ளிக்குக் கிடைத்தன.

இதற்கிடையே ஆங்கில வழி வகுப்புகளை 2012-ல் தொடங்கினோம். 2016-ல் கணினி வழிக்கல்வியில் அதிகக் கவனம் செலுத்தினோம். இவை தவிர வழக்கமான வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் செயல் வழி முறையில் மாற்றி அமைத்தோம். உதாரணமாக மூவேந்தர்களைப் பற்றிய பாடம் எனில், 3 பேருக்கு மூவேந்தர் வேடமிட்டு அந்தப் பாடத்தையே நாடகமாக மாற்றி விடுவோம்.

தேர்தலைப் பற்றி மாணவர்கள் புரிந்து கொள்ள வசதியாக, மாணவர்களிலேயே சிலரை வேட் பாளர்களாக அறிவித்துப் பிரச்சாரம், வாக்குச் சேகரிப்பு, வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை என அனைத்தையும் மாணவர்களுக்கு நடத்திக் காட்டுவோம்.

நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நூல் கொடைத் திட்டம் கொண்டு வந்தோம். அதில் கிடைத்த நூல்களைக் கொண்டு ஒவ்வொரு வகுப்பறையிலும் 200 நூல்களைக் கொண்ட புத்தக மூலை (Book Corner) உருவாக்கப்பட்டது. வேறு 4 பள்ளிகளுக்கு எங்கள் மாணவர்கள் 400 புத்தகங்களைக் கொடையாக வழங்கியுள்ளனர்.

எங்கள் பள்ளியில் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளால் ஏராளமான இளம் பேச்சாளர்கள் உருவாகியுள்ளனர். இந்த ஆண்டு 5-ம் வகுப்பு முடித்துச் சென்றுள்ள அக்்ஷயா, மாசாணம் என்ற 2 மாணவர்கள் தொழில்முறை பட்டிமன்றப் பேச்சாளர்களாக வளர்ந்துள்ளனர். இதுவரை 25-க்கும் மேற்பட்ட மேடைகளில் அவர்கள் பேசியுள்ளனர்.

தமிழ்நாட்டின் எல்லா அரசுப் பள்ளிகளிலும் இன்று ஒலித்துக் கொண்டிருக்கும்

‘தாயெனப்படுவது

தமிழ்' என்ற குறுந்தகட்டைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள

‘இனிமைத்

தமிழ் மொழி எமது' என்ற பாடலை எங்கள் பள்ளி மாணவர்கள் பாடியுள்ளனர். அனைத்து ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால்தான் இத்தகைய சாதனைகளை நிகழ்த்திக் காட்ட முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் பள்ளியில் செயல் படும் ஜிஎஸ்எல்வி (GSLV Girls Student Leading Volunteer) அமைப் பில் பெண்களும், பிஎஸ்எல்வி (BSLV Boys Student Leading Volunteer) அமைப்பில் ஆண்களும் தொண்டர்களாக உள்ளனர்.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆணையரான ஐஏஎஸ் அதிகாரி வி.பழனிகுமார் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர். தமது பள்ளி பற்றி அவர் கூறும்போது, “நான் வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர எனக்கு ஆரம்பக் கல்வியை அளித்த எங்கள் யானைமலை ஒத்தக்கடை பள்ளியின் அர்ப்பணிப்பான ஆசிரி யர்களே காரணம். இன்றைக்குப் பணியாற்றும் ஆசிரியர்களும் அதே அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவதாலேயே எங்கள் ஊர் பள்ளி மாநிலத்திலேயே முன்மாதிரி பள்ளியாக உயர்ந்து நிற்கிறது” என்றார்.

யானைமலை ஒத்தக்கடை அரசு பள்ளியின் பெருமை அந்த மலை அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 9842195052




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive