இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனமான பாரதி ஏர்டெல் தனது சொந்தமான 4ஜி ஸ்மார்ட்போனினை தீபாவளி தினத்தில் வெளியிட தயாராகி வருவதாகவும்,
இதற்கென மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வா மற்றும் கார்பன் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் புதிய முடிவு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள ரூ.1,500 விலையில் வழங்கும் 4ஜி பீச்சர் போன் திட்டத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. ஜியோபோன் பீட்டா டெஸ்டிங் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், செப்டம்பர் மாத வாக்கில் இவை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ அறிவித்துள்ள இலவச மற்றும் மலிவு விலை சலுகைகளை போன்றே ஏர்டெல் நிறுவனமும் போட்டி சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வெளியாக இருக்கும் ஏர்டெல் போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் போன் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை டவுன்லோடு செய்யும் வசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் மற்றும் மலிவு விலை டேட்டா சலுகைகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் மே மாதம் வரையிலான காலாண்டில் மட்டும் ஏர்டெல் 72 சதவிகித இழப்பை சந்தித்ததாக தெரிவித்திருந்தது.
மார்ச் 2016-ம் ஆண்டு வாக்கில் ரூ.1,319 கோடி வருவாய் பெற்ற ஏர்டெல் நிறுவனம் மே 2017 வரையிலான காலாண்டில் ரூ.373 கோடிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மொத்த லாபம் டிசம்பர் 2016-ம் ஆண்டு காலாண்டில் 55 சதவிகிதம் சரிந்தது. ஏர்டெல் வருவாய் இழப்பிற்கு ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு அறிவித்த இலவச சேவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 2016-ம் ஆண்டில் ஜியோ அறிவித்த இலவச சேவைகள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இலவச சேவைகள் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு மார்ச் 2017 வரை இலவச சேவைகள் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருகிறது. ஜியோ அறிமுகமாகி 170 நாட்களில் ஜியோ நெட்வொர்க்கில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்தனர். மேலும் அடுத்த சில மாதங்களில் மேலும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்வொர்க்கில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...