மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறிய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் அட்டை. பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர் அறியும் வகையில்
நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் அட்டை விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கம் சென்னை அண்ணா
பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (ஆக.30) தொடங்கியது. இந்தக் கருத்தரங்குக்கு புதுதில்லியில் உள்ள தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. கருத்தரங்கை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடக்கி வைத்துப் பேசியது:-
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ள ஸ்மார்ட் அட்டையில் 'சிப்' ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இது அடையாள அட்டையாக மட்டுமின்றி பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கையை பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*கணினி பயிற்றுநர்கள் நியமனம்:*
தற்போது 6,029 பள்ளிகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதற்கான பயிற்றுநர்களை புதிதாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிய பாடத் திட்டத்தை வடிவமைக்க ஏற்படுத்தப்பட்ட உயர்நிலைக் குழுவின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி அதன் பிறகு ஒரு மாத காலத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள மையங்களிலேயே தேர்வெழுதும் வகையில் புதிதாக 412 இடங்களில் புதிய மையங்கள் அமைக்கப்படும். விடுமுறை நாளாக இருக்கும் சனிக்கிழமை மாணவர்களுக்கு 3 மணி நேரம் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் அடுத்த ஒரு மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்.
*காலியாக உள்ள வகுப்பறைகள்...*
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு நிரந்தர அலுவலகம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறையைக் கண்டறிந்து அங்கு அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோன்று முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
*தொடக்கக் கல்வி இயக்குநர் செ.கார்மேகம்:*
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிச் செல்லும் போது மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) வழங்கப்படும். ஆனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பதிவுத்தாள் ('ரெக்கார்டு ஷீட்') வழங்கப்பட்டு வந்தது.
இதைத் தொடர்ந்து எங்களது கோரிக்கையை ஏற்று தற்போது அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இருந்து மாறிச் செல்லும் மாணவர்களுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...