'கடின உழைப்புடன் பாடங்களை ஆழமாக படித்தவர்கள் அதிக மதிப்பெண்
பெறும் வகையில் டி.ஆர்.பி., தேர்வு அமைந்திருந்தது' என தேர்வு
எழுதியவர்கள் தெரிவித்தனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு டி.ஆர்.பி., எனும் ஆசிரியர்
தேர்வு வாரியம் சார்பில் நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம்,
இயற்பியல், வேதியியல், வரலாறு உட்பட 10 பாடங்களுக்கு நடந்த இத்தேர்வில்
மொத்தம் 150 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில்
110, உளவியல் 30, பொது அறிவு பகுதியில் 10 வினாக்கள் என 150 வினாக்கள்
கேட்கப்பட்டன. முக்கிய பாடங்களில் சற்று கடினமாகவும், ஆழமாக படித்தவர்கள்
அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் வினாக்கள் கேட்கப்பட்டன.
மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
* கந்த அஞ்சுகம் (ஆங்கிலம்): முக்கிய பாடங்களில் இடம் பெற்ற
110 வினாக்களும், பாடங்களுக்கு உள்ளே இருந்துதான் அதிகம் கேட்கப்பட்டன.
செய்யுள் பகுதியில் கேட்கப்பட்ட வினாக்கள், பாடலுக்குள் உள்ள வரிகளை
குறிப்பிட்டு அதை எழுதியவர் உட்பட கிளை வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல்
பகுதியும் கொஞ்சம் கடினமாக இருந்தது.
* அன்புச்செல்வி (கணிதம்): இதுவரை நடந்த தேர்வுகளில் உள்ளதை
விட, விதியை பின்பற்றி விடையளிக்கும் வகையிலான வினாக்கள் அதிகம்
கேட்கப்பட்டன. ஒரே வினாவில் இரு விதிகளை ஒப்பிடும் வகையிலும் கேட்கப்பட்டன.
கடின பகுதியான இயற்கணிதம், பகுமுறை, பகுத்தாய்வு பகுதிகளில் இருந்து அதிக
வினாக்கள் கேட்கப்பட்டன. உளவியல், பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது.
* அபிராமி (வரலாறு): வினாக்களை நேரடியாக கேட்காமல் காரணம்
அறிதல், இக்கூற்று உண்மை, இவ்வினாவிற்கு உள்ள தொடர்பு என்ன... என்ற வகையில்
தேர்வர்களை குழப்பும் வகையில் கேட்கப்பட்டன. விடை தெரிந்திருந்தாலும்
யோசித்த பின் தான் எழுத வேண்டிய நிலை இருந்தது. உளவியல் மற்றும் பொது அறிவு
பகுதி வினாக்கள் எளிது.
* ஜெயக்குமார் (பொருளியல்): நேரடியாக விடை தெரிந்த வினாக்கள்
கூட, குழப்பும் வகையில் இடம் பெற்றன. ஒரே வினாவிற்கு மூன்று விடைகள்
தெரிந்தால் மட்டுமே விடை எழுதும் வகையில் இருந்தன. உளவியல் பகுதியிலும்
கடின வினாக்கள் இடம் பெற்றன. பொது அறிவு பகுதி எளிதாக இருந்தது.
* இந்து (வணிகவியல்): எளிதான வினாக்களும் குழப்பும் வகையில்
கேட்கப்பட்டிருந்தன. 30 சதவீத வினாக்கள் யோசித்து எழுதும் வகையில்
அமைந்திருந்தன. உளவியல் மற்றும் கல்வி மேம்பாடு பகுதியில் இருந்த
கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தன. பி.எட்., பாடத்திட்டத்தில் இல்லாத
சில வினாக்களும் இடம் பெற்றன.
இவ்வாறு கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...