''கல்வி என்பது பாடம் படிப்பது, மார்க் எடுப்பது மட்டுமில்லை. மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்கள் சிலர் வாழ்க்கையில் தோற்றுப் போவதுண்டு. பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்களும் வாழ்க்கையில் பெரியதாக ஜெயிப்பதுண்டு. கல்வி, சுயஒழுக்கம், சமூக பிரக்ஞை, தேசப்பற்று என எல்லாம் கலந்த மாணவர்கள்தான் தேவை. அதனால்தான், நாங்க தினமும் இருபது நிமிடங்கள் ஒதுக்கி, அரசுப் மாணவர்களைச் சகல விஷயங்களிலும் செம்மை நிறைந்தவர்களாக உருவாக்கும் பயிற்சி கொடுக்கிறோம்'' என்கிறார்கள் மனோகர் மற்றும் வெங்கடேஷ். இருவரும் கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள். மிகவும் பின்தங்கிய கிராமமான இங்கே படிக்கும் மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதில் அக்கறையுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதலில் பேசிய ஆசிரியர் மனோகர், "அரசுப் பள்ளியில் சேர்த்தால், பிள்ளைகளின் எதிர்காலம் வீணாகிடுமோன்னு நினைக்கிற பெற்றோர்கள் அதிகம். நானும் கிராமப் பகுதியிலிருந்து படித்து, ஆசிரியர் வேலைக்கு வந்தவன்தான். அதனால், கிராமத்தின் சூழல் எனக்குத் தெரியும். நான் ஆசிரியர் வேலைக்கு வந்ததால், வறுமையிலிருந்த என் குடும்பம் நிமிர்ந்திருக்கு. அதுமாதிரி இங்குள்ள மாணவர்களின் வாழ்க்கையையும் உயர்த்தணும்னு நினைச்சேன். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைக் கேள்விகள் கேட்க பழக்கினோம். கேள்வி கேட்கும் ஞானம்தான் அறியாமையை விரட்டி அடிக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவெச்சோம். ஆரம்பத்தில், அவர்களின் கேள்விகள் அபத்தமாக இருந்தாலும், பிறகு அறிவுப்பூர்வமா கேட்க ஆரம்பிச்சாஙக். அவர்களுக்குப் பதில் சொல்றதுக்காகவே நாங்க கூடுதல் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிச்சோம்.
கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவது அடிப்படை விஷயம்தான். அவர்களை நல் மனிதர்களாக உருவாக்குவது முக்கியம் என்பதை உணர்ந்து, இரண்டு வருடங்களாக அதை நோக்கி மாணவர்களை அழைச்சுட்டு போறோம். ஸ்கவுட் வழியே பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் நடுதல் எனச் சமூக அக்கறைகொண்டவர்களாக மாற்றினோம். தமிழ்நாட்டில் ஸ்கவுட் செயல்படும் ஒருசில பள்ளிகளில் எங்கள் பள்ளியும் ஒன்று. வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஐந்து நாட்களும் மதியம் 12 முதல் 12.20 வரை நேரம் ஒதுக்கி, மாணவர்களின் பன்முக திறன்களை வெளிகொண்டு வருகிறோம்'' என்றார்
தொடர்ந்து பேசிய ஆசிரியர் வெங்கடேஷ், "அந்த இருபது நிமிட பன்முகப் பயிற்சியில், திங்கள் கிழமை மாணவர்களின் பேச்சாற்றலை வளர்க்கிறோம். சின்னச் சின்ன தலைப்பு கொடுத்து, அவர்களைப் பேசவைக்கிறோம். இதனால், வருங்காலத்தில் அவர்களுக்குப் பேச்சாற்றல் வளர்வதோடு, தாழ்வுமனப்பான்மை நீங்கும். ஆளுமைத் திறனும் தலைமைப் பண்பும் பெருகும். செவ்வாய்க் கிழமைகளில் மத்திய அரசு செயல்படுத்தும் விஞ்ஞான் பிரச்சார் நெட்வொர்க்கில் உள்ள வீடியோக்களை யூடியூப்பில் டவுன்லோடு செய்து, எல்.இ.டி திரையில் காட்டுகிறோம். தொடர்ந்து உள்ளூரிலேயே கிடைக்கும் சின்னச் சின்னப் பொருள்களில் எக்ஸ்பிரிமென்டல் டெமோ காட்டுறோம். அதாவது, காற்று, நீர், புவியீர்ப்பு, எலெக்ட்ரிக்கல், விசை என அறிவியல் சம்பந்தமான ஆற்றல்களைச் செய்முறைகளாக செஞ்சு விளக்குகிறோம். மாணவர்களையும் அவர்கள் கோணத்தில் அந்த ஆற்றல்களை விளக்க கிடைக்கும் பொருள்களில் எக்பிரிமென்டல் செஞ்சுட்டு வரச் சொல்றோம்.
புதன் கிழமை ஸ்கவுட் வழியே சேவை, தேசப்பற்று, உடற்பயிற்சி சம்பந்தமான விஷயங்களை உணர்த்துறோம். இது சம்பந்தமான மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளவும் தயார்படுத்துகிறோம். வியாழக்கிழமை, மாணவர்களுக்கான நன்னடத்தை, உடல்நலம், கலை சம்பந்தமான திறமைகளை வளர்க்கும் பயிற்சி கொடுக்கிறோம். கம்பியூட்டர் அறிவை வளர்க்கவும் கூடுதலா பயிற்சி தருகிறோம். 'கிரீன் ஓ கிரீன்' மாணவர்களுக்கு மரக்கன்று நடவைப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு, கிராம மக்களுக்குத் துணி பை வழங்குவது, பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே பாத்திரங்களில் தண்ணீர்வைத்து பறவைகளின் தாகம் தீர்ப்பது எனப் பல விஷயங்களில் ஈடுபடுத்துகிறோம். வெள்ளிக்கிழமை உடல்நலம் சம்பந்தமான பயிற்சி தருகிறோம். விளையாட்டு, உடற்பயிற்சி, பற்களைச் சுத்தமாக பராமரிப்பது போன்றவை இதில் அடங்கும். இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய போட்டிகளை மாதா மாதம் நடத்தி, அதில் ஜெயிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்மைலி பேட்ஜை அணிவித்துக் கௌரவிக்கிறோம்'' என்று பட்டியலிட்டு வியக்கவைக்கிறார்.
அதோடு, தண்ணீர் தினம், வன தினம், சுற்றுச்சூழல் தினம் என ஒவ்வொரு சிறப்பு தினங்களின்போதும் அது சம்பந்தமா நிகழ்ச்சிகளை நடத்தி, மாணவர்கள் மனதில் விழிப்புஉணர்வை விதைப்பதாகச் சொல்லும் மனோகர் மற்றும் வெங்கடேஷ், ''எங்கள் மாணவர்கள் எல்லா விஷயத்திலும் முதன்மையானவர்களாக, சிறந்த மனிதர்களாக வருங்காலத்தில் மிளிர வேண்டும். அதற்காகத் தொடர்ந்து உழைப்போம். இது தவிர பள்ளியில் நவீன வகுப்பறை, கூடுதலான கணினி வசதி ஏற்படுத்த நினைக்கிறோம். பொருளாதாரம் இல்லை. ஸ்பான்சர்ஸ் கிடைத்தால், எங்களின் செயல்பாடு பலமடங்கு அதிகரிக்கும்" என்று கோரிக்கையோடு புன்னகைக்கிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...