நீட் தேர்வுகுறித்த பிரச்னையே இன்னும் தீரவில்லை... நீதிமன்ற வழக்குகள்
தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. அகில இந்திய தேர்வைக் கண்டு தமிழக மாணவர்கள்
பயப்படுகிறார்களா அல்லது பயமுறுத்தப்படுகிறார்களா? அகில இந்திய அளவில்
சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் மூலம் படித்தால்தான், நீட் போன்ற அகில இந்திய
அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியுமா? மாநிலப்
பாடத்திட்டத்தில் படித்தவர்கள் நுழைவுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற
முடியாதா? என்பதுகுறித்து அறிய, கல்வியாளர்களின் கருத்தறிந்தோம்.
கல்வியாளரும், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வருமான ஆயிஷா நடராஜன்:
"அகில
இந்திய அளவில் கல்வியாளர்கள் ஒன்றுகூடி பாடத்திட்டங்களை வடிமைப்பதற்காக
சில வரையறைகளை வகுத்திருக்கிறார்கள். இந்த வரையறைகளைப் பின்பற்றித்தான்
சி.பி.எஸ்.இ-யும் மாநில அரசுகளும் பாடத்திட்டத்தைத் தயாரிக்கின்றன.
என்.சி.ஆர்.டி-யில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்களில் 37
சதவிகிதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய அளவில் பல விஷயங்களைச்
சாதித்தவர்களாக இருக்கிறார்கள் தமிழ்நாட்டுக்காரர்கள். ஆனால்,
தமிழ்நாட்டில் நம்முடைய பாடத்திட்டங்களை உடனுக்குடன் மேம்படுத்தத்
தவறிவிட்டோம்.
தமிழக
பாடத்திட்டத்தில் மேல்நிலை வகுப்புப் பாடங்களை மேம்படுத்தி, பன்னிரண்டு
வருடங்கள் ஆகிவிட்டன. சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி
எட்டு வருடங்கள் ஆகிவிட்டன. பாடத்திட்டங்களை உடனுக்குடனே
மேம்படுத்தவேண்டியது அவசியம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மேம்படுத்தி ஏழு
வருடங்களாகின்றன. சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்கள் சிறப்பானது எனச் சொல்லி, ஏழு
வருடங்களாக மேம்படுத்தாமல் இருக்கும் பாடத்திட்டத்தை நாமும்
கடைப்பிடிக்கக் கூடாது.
தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் போட்டிபோடுவதற்கு, பாடத்திட்டத்தையும்
பாடம் கற்பித்தல் முறையையும் மாற்ற வேண்டும்; அனைத்து தேர்வுகளையும்
எதிர்கொள்ளும்வகையில் தரமாக அமைக்க வேண்டும். ஆந்திராவில், பாடத்திட்டங்கள்
குறித்த விவரங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன; பாடப்புத்தகத்தை
வழங்குவதில்லை. ரெஃபரன்ஸ் புத்தகங்களில் பெயர்களை மட்டும்
குறிப்பிட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களுக்குப் பதிலாகப்
பாடப்புத்தகத்தை வழங்கிவிடுகிறோம்.
பாடப்புத்தகத்திலிருந்துதான் கேள்வி கேட்பார்கள் என மாணவர்களிடம்
சொல்லிவைத்திருக்கிறோம். பாடப்புத்தகங்களை நகல் எடுக்கும் இயந்திரங்களாக
மாற்றிவைத்திருக்கிறோம். இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப்
பதிலளிக்கும் திறனை மழுங்கடிக்கிறோம். இந்த முறை மாற வேண்டும். ஒவ்வோர்
ஆண்டும் தமிழகப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்" என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கையின் முன்னாள் இயக்குநரும் பேராசிரியருமான முனைவர் நவநீதகிருஷ்ணன்:
சி.பி.எஸ்.இ பாடத்திட்டமும், தமிழக பாடத்திட்டமும், பாடம் நடத்தும்
முறையிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. திறமையான மாணவர்கள்
இருக்கிறார்கள். ஆனால், தேர்வு நடத்தும் முறையில்தான் மிகவும்
பின்தங்கியுள்ளோம்.
பொதுத்தேர்வில்
எல்லாவற்றையும் பாடப்புத்தகத்திலிருந்தே கேட்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறோம். புத்தகத்தில் இல்லாத சுயமாகச்
சிந்தித்து விடையளிக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டால்,
பாடப்புத்தகத்துக்கு வெளியே இருந்து கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என போனஸ்
மதிப்பெண் கேட்கும் நிலையை உருவாக்கியிருக்கிறோம். இதற்குப் பள்ளியை
நடத்துபவர்களும் ஆசிரியர்களும் துணைக்கு வருகிறார்கள். இதனால் மாணவர்கள்
எதையும் சுயமாகச் சிந்திக்க முடியாதபடி செய்துவிட்டோம்.
புத்தகத்தில் இருப்பது மாதிரியான வினாக்களில் இருந்துதான் கேட்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மிகப்பெரிய தவறு. இந்த வினாக்களுக்கு
மட்டும் பதிலைத் தெரிந்துகொண்டு தேர்வு எழுதி 200-க்கு 200 மதிப்பெண்
வாங்குகிறார்கள். புரிதலே இல்லாமல் மனப்பாடம் செய்வதே சரி என்று
தயார்செய்துவிட்டோம். இதை மாற்றினால் மட்டுமே அனைத்து தேர்வுகளையும்
எதிர்கொள்ள முடியும்.
சி.பி.எஸ்.இ
தேர்வின் கேள்வித்தாள்கள், தமிழக தேர்வுகளிலிருந்து வேறுபட்டிருக்கும்.
கேள்விகள், புத்தகத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை. பதில்களுக்கான
பகுதிகள் மட்டும் புத்தகத்தில் இருந்தால் போதுமானது. 2006-ம் ஆண்டு வரை
நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடத்திவந்தோம். அதைத் தொடர்ந்து
வந்திருந்தால் இன்றைக்கு அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளில் நம்
மாணவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றிருப்பார்கள்" என்கிறார் பேராசிரியர்
நவநீதகிருஷ்ணன்.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்:
"சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தோடு ஒப்பீடும்போது தமிழக பாடத்திட்டமே
சிறப்பாகத்தான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ பள்ளியில், நடுத்தர மக்களின்
பிள்ளைகள் படிக்கிறார்கள். சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அகில
இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னரே
திட்டமிட்டு கோச்சிங் சென்டர்களுக்குச் செல்கிறார்கள். பெற்றோர்
செலவுசெய்து பயிற்சி வகுப்பில் சேர்க்கிறார்கள். இரண்டு வருடங்களில்
இருந்து நான்கு வருடங்கள் வரை பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள்.
நாற்பதாயிரம் ரூபாயிலிருந்து நான்கு லட்சம் ரூபாய் வரை செலவுசெய்கிறார்கள்.
இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதினாலும் தேர்ச்சி
விகிதம் அதிகமாக இருக்கிறது.
சி.பி.எஸ்.இ
பாடத்திட்டங்களாலோ தமிழகப் பாடத்திட்டங்களாலோ அகில இந்திய அளவில்
நடைபெறும் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை. இதுதான் அடிப்படை காரணம்.
அறிவாற்றல் அடிப்படையில் பார்க்கும்போது மாணவர்களிடையே பெரிய அளவில்
வேறுபாடு இல்லை. 95 சதவிகித பேரின் அறிவாற்றல், ஒரே மாதிரிதான் இருக்கும்.
வாய்ப்புகள் மட்டுமே வேறுபடுகின்றன. வாய்ப்புகள் இல்லாததால் அறிவை
வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல்போகிறது. அதனால் வாய்ப்பு
கிடைக்காதவர்கள் எல்லாம் அறிவு குறைந்தவர்கள் எனச் சொல்ல முடியாது.
வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் சமுதாயத்தில் நாம் இல்லை. ஒரே
இடத்துக்குத்தான் எல்லோரும் போட்டிபோடுகிறார்கள். போட்டிமுறை
கல்வியாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை பொதுப் பள்ளி கல்வி
முறையில் படித்தவர்கள்தான் அனைத்து இடங்களையும் பெற்றுவந்தார்கள். இவர்கள்,
பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை; நீட் தேர்வையும் எழுதியதில்லை. நீட்
தேர்வு, சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. மருத்துவக்
கல்லூரிகள்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்ள
வேண்டும்.
பாடத்திட்டங்கள், அவ்வப்போது மாற்றங்களைக்கொண்டு வரவேண்டும். முன்பு, ஐந்து
வருடங்களுக்கு ஒருமுறை பாடத்திட்டங்களை மாற்றிக்கொண்டிருப்போம். ஆனால்,
இப்போது பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாக மாற்றியமைக்கவில்லை. பாடத்திட்டம்
எதுவாக இருந்தாலும் பாடத்தை எப்படி வகுப்பறையில் நடத்துகிறார்கள் என்பதே
முக்கியம். அதுதான் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும்.
பாடப்புத்தகத்தைத் தாண்டி எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்க முடியாத
நிலையில் இருக்கிறார்கள். இதை மாற்றி அமைக்க, தேர்வு சீர்திருத்தத்தை உடனே
கொண்டு வர வேண்டும். ப்ளூபிரின்ட் முறையை ஒழிக்க வேண்டும். எந்தக் கேள்வி
கேட்பார்கள் என்ற அனுமானத்தை ஒழித்தாலே விரிவாகப் படிப்பார்கள். அனைத்து
தேர்விலும் வெற்றி பெறுவார்கள்" என்கிறார் ராஜகோபாலன்.
நம் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கவைக்க முடியவில்லையே என
நினைக்கும் பெற்றோர்களும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த
மாணவர்கள்தான் தேர்வில் அதிகளவில் தேர்ச்சிபெறுகிறார்கள் என
வாதிடுபவர்களும், கல்வியாளர்கள் சொல்லும் கருத்தைக் கவனிக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...