விளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நுழைவாயில்.
கிராம மக்களின் ஒற்றுமையான செயல்பாடுகள்; ஆசிரியர்களின் தொடர் முயற்சிகள்; மாணவர்கள் விரும்பும் வகையில் கற்பித்தல்
ஆகிய அம்சங்களால் வேகமாக வளர்ந்து வருகிறது ஓர் அரசு தொடக்கப் பள்ளி.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி ஒன்றியம் விளக்குடி
கிராமத் தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த ஆண்டு
திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலேயே புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகமாக
நடைபெற்ற தொடக்கப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில்
மொத்தம் 207 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களில் 52 பேர் இந்த ஆண்டு
புதிதாகச் சேர்ந்தவர்கள்.
பிற அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை
என்பது கடும் சவாலாக மாறியுள்ள சூழலில், விளக்குடி பள்ளியில் அதிக
மாணவர்கள் சேருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ்வழி வகுப்புகள் மட்டுமே
நடை பெறுகின்றன. ஒவ்வொரு பாடத்தின் மைய நோக்கத்தையும் மாணவர்களுக்கு புரிய
வைத்திட வேண்டும் என்பதில் இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் மிகத் தீவிரம்
காட்டுகின்றனர். அதற்காக எளிதாக கற்பிக்க உதவும் ஏராள மான துணைக் கருவிகளை
பயன் படுத்துகின்றனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் துணைக் கருவிகள்
வழங்கப்படுகின்றன. அது தவிர இந்தப் பள்ளி ஆசிரியர்களே சொந்த முயற்சியில் பல
துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர். ஆசிரியர்களின் இந்த முயற்சிகளுக்கு
ஆசிரியர் பயிற்றுநர் ந.காளிதாஸ் உறுதுணையாக உள்ளார்.
இது தொடர்பாக காளிதாஸ் கூறிய தாவது: 1-ம் வகுப்பு
மாணவர்களுக்கு எழுத்துகள், எண்களை அறிமுகம் செய்வது முதல் 5-ம் வகுப்பு
மாணவர்களுக்கு கணித, அறிவியல் பாடங்களின் சூத்திரங்களை கற்பிப்பது வரை
அனைத்து பாடங்களையும் துணைக் கருவிகள் உதவியுடன் ஆசிரியர்கள் எளிதாகப்
புரிய வைக்கின்றனர். ஆங்கிலத்தில் வாசிப்பை எளிதாக்கவும், வாக்கிய அமைப்பு
முறைகளை புரிய வைக்கவும் துணைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பாடத்தை நடத்துவதற்கு முன்பும், அந்தப் பாடத்தை
எவ்வாறு கற்பித்தால் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்பதை
திட்டமிடுவதில் ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிடுகின்றனர்.
புதிய புதிய கற்பித்தல் உத்திகளைக் கூறும்போது, நம்மால்
முடியாது என்று தட்டிக்கழிக்காமல், வகுப்பறையில் செய்து பார்க்கலாமே
என்பதில் இந்தப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆசிரியர்களின் இந்த ஆர்வமும், முனைப்பும்தான் இந்தப் பள்ளியை இன்று
முன்மாதிரிப் பள்ளியாக மாற்றியுள்ளது. இவ்வாறு காளிதாஸ் கூறினார்.
புதிய மாணவர்களை மேள, தாளத்துடன் பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் ஊர் மக்கள்.
“எங்கள் பள்ளியில் பயிலும் மாண வர்கள்தான் பொதுமக்களிடத்தில்
பள்ளி யின் பெருமையை பரப்பும் விளம்பர தூதர்கள்” என்று பெருமிதமாகக் கூறு
கிறார் பள்ளியின் தலைமையாசிரியர் பா.கமலா.
“வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனோடு எங்கள்
பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை ஊர் மக்களே ஒப்பிட்டுப்
பார்க்கின்றனர். தமிழ் வழிப் பள்ளியாக இருந்த போதிலும், ஆங்கில மொழி
அறிவிலும் எங்கள் மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாகவே உள்ளது. இதனை
உணர்ந்து கொண்டதால் அதிக மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்கின்றனர்” என
நெகிழ்கிறார் அவர்.
ஆங்கில மொழி அறிவை வளர்க்க காலாண்டு, அரையாண்டு விடுமுறை
நாட்கள், வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆசிரியர் பயிற்றுநர் காளிதாஸ் எல்லா விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு
ஆங்கில உரையாடல் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார்.
“இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 5-ம்
வகுப்பு முடிக்கும்போது மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும்
வேண்டும். அதனை நோக்கமாகக் கொண்டு நாங்கள் பயிற்சி அளித்து வருகிறோம்”
என்கிறார் காளிதாஸ்.
தமிழ், கணிதம், அறிவியல் பாடங் களில் இந்தப் பள்ளி
மாணவர்களின் கற்றல் திறன் அதிகமாக இருப்பதை பலரும் அறிந்திருக்கிறார்கள்.
இப்போது ஆங்கில மொழி அறிவை வளர்க்கவும் கூடுதல் கவனம் செலுத்துவது பெற்றோரை
கவர்ந்துள்ளது. இதுவும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணம்
என்கின்றனர் கிராம மக்கள்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் கே.என்.சீராளன் கூறியதாவது:
பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதில் ஊர் மக்கள் அனைவரும் ஒரே
சிந்தனையுடன் செயல்படுகிறோம். ஊர் மக்களையும், ஆசிரியர்களையும் உள்ளடக்கிய
கிராமக் கல்விக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர்
கழகம் ஆகிய அமைப்புகள் நன்றாகச் செயல்படுகின்றன. ஆசிரியர்களும், ஊர்
மக்களும் அடிக்கடி கூடி பள்ளியின் வளர்ச்சி பற்றி விவாதிக்கிறோம்.
அர்ப்பணிப்புடன் கூடிய ஆசிரியர்கள் கிடைத்திருப்பது எங்கள் கிராம பள்ளி
வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்தே மாணவர் சேர்க்கைக்கான
பணிகளைத் தொடங்கி விட்டோம். ஊர் மக்களுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர்கள்
ஒவ்வொரு வீடாகச் சென்று மாணவர்களை எங்கள் கிராமத்து பள்ளியிலேயே
சேர்க்குமாறு வலியுறுத்தினர். இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட பெற்றோரிடத்தில்
அதிக வரவேற்பு இருப்பதை உணர முடிகிறது.
பள்ளியில் புதிதாகச் சேர்ந்த மாணவர் களுக்கு வரவேற்பு
அளிக்கும் விழா கடந்த ஜூன் 23-ம் தேதி நடத்தினோம். ஊரின் மையப்
பகுதியிலிருந்து நாதஸ் வரம், மேள, தாளம் முழங்க புதிய மாணவர்களை ஊர்வலமாக
பள்ளிக்கு அழைத்து வந்தோம். ஊர் மக்கள் அனை வரும் இந்த ஊர்வலத்தில்
பங்கேற்ற னர். பள்ளிக்கு தேவையான சில முக்கிய மான பொருட்களை சீர்
வரிசையாகக் கொண்டு வந்து கிராம மக்கள் கொடுத் தனர். இவ்வாறு சீராளன்
கூறினார்.
ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை
மரங்கள் நிறைந்து பள்ளியின் சூழல் பசுமையாக உள்ளது.
குழந்தைகள் விரும்பும் வகையில் வகுப்பறைகள் அழகாக உள்ளன. மதிய உணவு இடைவேளை
நேரத்தில் எந்த வகுப்பை எட்டிப் பார்த்தாலும் உணவுக்குப் பிறகு
பல்லாங்குழி, தாயம் என பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் மும்முரமாக
உள்ளனர்.
வண்ணமயமான பள்ளியின் கழிப்பறை. உள்படம்: தலைமை ஆசிரியர் கமலா
சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர்
மக்கள் அனைவரும் விரும்பக் கூடிய வளாகமாக இந்தப் பள்ளிக்கூடம்
விளங்குகிறது. இத்தகைய ஆரோக்கியமான சூழலால் பள்ளி நாளுக்கு நாள் வளர்ந்து
வருகிறது.
“பள்ளிக்கூடத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக நன்கொடையாளர்களின்
உதவியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை உருவாக்க வேண்டும். இதுவே எங்கள்
உடனடி இலக்கு” என்கிறார் தலைமை ஆசிரியர் கமலா.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 97878 22318.
ஆசிரியர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDelete