Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிரேக்-அப் படிப்பு முதல் கிரேடிங் முறை வரை... அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள மாற்றங்கள் என்னென்ன?

இந்த ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு விரும்பிய பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறையை அறிமுகம் செய்ய இருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். 
 "இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு பொறியியல் கல்லூரியில் சேரும் அனைத்து மாணவர்களும் இந்தமுறையைப் பின்பற்றுவார்கள்"
என்கிறார் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கான இயக்குநரும், கிண்டி பொறியியல் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் கீதா.

இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 22-வது பாடத்திட்டங்களுக்கான நிபுணர்கள் குழு கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து என்னென்ன மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறித்து விரிவாக விவரித்தார்.

விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கும் முறை (Choice Based Credit System (CBCS): இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்கள் விருப்பப்பட்ட பாடத்தை தேர்ந்தெடுத்துப் படிக்கும் முறையைக் கடைப்பிடிப்பார்கள். ஒவ்வொரு துறையிலும் முதன்மை பாடங்களைத் தவிர, விருப்பப்பாடங்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்தப்பாடங்களையும் தேர்ந்தெடுக்கலாம். மூன்றாவது செமஸ்டரில் இருந்து எட்டாவது செமஸ்டர் வரை தங்களுடைய துறையைத்தவிர இதர துறையில் உள்ள விருப்பமான பாடங்களைத் தேர்ந்தெடுத்து படிக்கவும் வாய்ப்பு உண்டு.

கடினமான பாடங்களைத் தவிர்க்க வாய்ப்பு: ஒவ்வொரு பாடத்துக்கும் குறிப்பிட்ட கிரடிட் புள்ளி மதிப்புகள் வழங்கப்படும். ஒரு செமஸ்டரில் கடினமாக உள்ள இரண்டு பாடங்களை படிக்காமல் விட்டு விடலாம். இதைப்போலவே, விருப்பமான இரண்டு பாடங்களைத் கூடுதலாக தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வாய்ப்புகள் உண்டு.

வேலைவாய்ப்புக்கு உதவும் பயிற்சிகளை பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளல்: இன்ஜினீயரிங் டிசைன், இன்டர்ன்ஷிப், கருத்தரங்குகள், தொழில்நிறுவனப் பயிற்சிகள், கோடைக்கால திட்டப்பணிகள், ஒரு குறிப்பிட்ட நிலை நேர்வு பற்றிய ஆய்வு (Case Study) போன்ற வேலைவாய்ப்புக்கு உதவும் வகையிலான பயிற்சிகளை பாடத்திட்டத்தில் புதியதாக சேர்த்து இருக்கிறார்கள்.

மதிப்புக்கூட்டப்பட்ட படிப்புகள் மற்றும் ‘ஆன்லைன்’ பாடத்திட்டங்கள்: முதன்மையான பாடங்களாக இல்லாமல் விருப்பத்தின் பெயரில் மதிப்புக்கூட்டப்பட்ட படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இவ்வாறு தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்புகள் குறித்த விவரம்  மதிப்பெண் தாளில் அச்சிட்டு வழங்கப்படும். இதைப்போலவே, அண்ணா பல்கலைக்கழக வழிகாட்டுதல்படி, ஆன்லைன் கோர்ஸ்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் செய்யலாம்.

தேர்ச்சி பெறாத பாடத்தில் எளிதில் தேர்ச்சி பெற வாய்ப்பு: தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் வகுப்பில் கலந்துகொண்டு படித்துத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். இதன்மூலம் அரியர் என்ற முறை இல்லாமல் போய்விடும். தேர்ச்சி பெறாத பாடங்களைப் படிக்க வகுப்பில் கலந்துகொள்வது கட்டாயமில்லை என்றாலும், வகுப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் நடத்தப்படும் Internal Exam-யை திரும்ப எழுத வேண்டும். அதன்பின்பு இறுதித் தேர்வை எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

கிரேடிங் முறையில் மாற்றம்: தற்போது S, A, B, C, D, E,U, I, W என்ற கிரேடிங் முறை இருக்கிறது. இனி, O (Outstanding- 91-100 மதிப்பெண்), A+ (Excellent- 81-90 மதிப்பெண்), A (Very Good- 71-80 மதிப்பெண்), B+ (Good - 61- 70 மதிப்பெண்), B (Above Average - 50- 60 மதிப்பெண்), RA (50 மதிப்பெண்ணுக்குக் குறைவான மதிப்பெண், SA (Shortage of Attendance), W (வகுப்பில் இருந்து விலகிக்கொள்ளல்) என்று கிரேடிங் முறையை மாற்றி இருக்கிறார்கள்.

படிப்பை இடையில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல வாய்ப்பு: முதல் இரண்டு வருடங்கள் பொறியியல் படிப்பைப் படித்துவிட்டு ஒரு வருடம் பயிற்சி பெறவோ அல்லது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றவோ செய்யலாம். ஓராண்டுக்குப் பின்னர், மீண்டும் படிப்பை தொடரச் செய்யலாம். இந்த முறையைப் பயன்படுத்த அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 8.5-க்கு குறைவில்லாத கிரேடு பாயிண்ட்களையும் பெற்றிருக்க வேண்டும்.

இனி 'சி' மொழிக்குப் பதிலாக பைதான் புரோகிராமிங்: பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அனைவரும் முதலாம் ஆண்டு 'சி' புரோகிராமிங் மொழி குறித்த பாடத்தைப் படிக்கிறார்கள். இனி, இந்த ஆண்டு முதல் முதலாம் ஆண்டில் 'சி' புரோகிராமிங் பாடத்துக்கு பதிலாக 'பைதான் (Python) புரோகிராமிங் பாடத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.

வேதியியல் பாடம் விருப்பப் பாடமாகிறது: முதலாவது மற்றும் இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடத்தை கட்டாயப் பாடமாக படிக்கிறார்கள் மாணவர்கள். இனி, முதல் செமஸ்டரில் மட்டும் வேதியியல் முதன்மை பாடங்களில் ஒன்றாக இருக்கும். இரண்டாவது செமஸ்டரில் விருப்பப்பாடங்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள். இதனால், இரண்டாவது செமஸ்டரில் வேதியியல் பாடம் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

எட்டாவது செமஸ்டர் பாடங்களை முன்னரே படிக்க வாய்ப்பு: மாணவர்கள் ஆறு செமஸ்டர் வரை அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று, ஒட்டுமொத்தமாக 7.5 கிரேடு பாயின்ட்களைப் போற்றிருந்தால், எட்டாவது செமஸ்டர் பாடத்தை ஏழாவது செமஸ்டரிலேயே படிக்க வாய்ப்பு வழங்கப்படும். எட்டாவது செமஸ்டரில் திட்டப்பணிகளை மட்டும் செய்தால் போதுமானது.

படித்து முடித்து மூன்று ஆண்டுகள் தேர்ச்சி பெற வேண்டும்: பொறியியல் படிப்பில் சேர்ந்து பதினான்கு செமஸ்டர்களுக்குள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேட்டரல் முறையில் சேர்பவர்கள் 12 செமஸ்டர்களின் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

முதல் வகுப்பில் தேர்ச்சி: ஐந்து ஆண்டுக்குள் எல்லாத் தேர்வுகளையும் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றும், ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளி 8.5-க்கு குறைவில்லாமல் இருந்தால் முதல் வகுப்பில் Distinction-யுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும். ஆறு ஆண்டுக்குள் அனைத்துப் பாடத்திலும் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்த மதிப்பெண் புள்ளியில் 7.0-க்கு குறைவில்லாமல் பெற்றிருந்தால் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள் என்று பட்டம் வழங்கப்படும்.

இந்த மாற்றங்கள் மூலம் மாணவர்கள் தங்களுடைய வேகத்துக்குத் தகுந்தாற்போல் பாடங்களைத் தேந்தெடுத்து படிக்க முடியும். மேலும், ஒரு துறையில் படிப்பவர்கள் இதர துறையின் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive