கரூர்: பள்ளி மேலாண்மை குழுவினர், ஒருங்கிணைந்த செயல்பாட்டால், க.பரமத்தி துவக்கப் பள்ளி, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்றுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, 2005ல்,
செயல்வழிக் கல்வி கற்பித்தலில் சிறப்பிடம் பெற்றதால், 25 ஆயிரம் ரூபாய்
பரிசு பெற்றது. தொடர்ந்து, பெற்றோர், நன்கொடையாளர்கள் மூலம், இணையதள
வசதியுடன், ஒன்பது கம்ப்யூட்டர்கள் கொண்ட ஆய்வகம் பள்ளியில்
ஏற்படுத்தப்பட்டது. தற்போது, 'டிஜிட்டல் மல்டி மீடியா' வகுப்பறை, மாணவ,
மாணவியருக்கு, 'டேப்' வசதி, 1,000 புத்தகங்கள் அடங்கிய நுாலகம்,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் பள்ளி
செயல்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், அரசு
பள்ளிகளுக்கு ரோல் மாடலாக உள்ள, மேற்கண்ட துவக்கப் பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ.,
தரச்சான்று கிடைத்துள்ளது. மாநில அளவில், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று பெற்ற,
நான்கு பள்ளிகளில், இதுவும் ஒன்று. தலைமையாசிரியர்செல்வகண்ணன் கூறியதாவது:
கடந்த, 2005ல், 104 பேர் படித்தனர். தற்போது, 190 பேர் படிக்கின்றனர்.
இதற்கு, 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழு தான் காரணம். ஓவியம், கராத்தே,
யோகா, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹிந்தி மொழி பயிற்சி, நடனம், இசை உள்ளிட்ட
சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, சிறப்பு ஆசிரியர்கள் ஏழு பேர் உள்ளனர். சமீபத்தில், பள்ளி
விரிவாக்கப் பணிக்காக, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில், 2,244 சதுர அடி நிலம்
வாங்கப்பட்டது. பெற்றோர், நன்கொடையாளர் தரப்பில் இருந்து, 40 லட்சம் ரூபாய்
வரை, பள்ளி வளர்ச்சிக்காக செலவிடப்பட்டு உள்ளது. மாணவ, மாணவியர்,
பெற்றோர், ஆசிரியர்களின் பிறந்த நாள், திருமண நாட்களில், அனைத்து
வகுப்புகளுக்கும், 'ஸ்பீக்கர்' மூலம் வாழ்த்து தெரிவிக்கப்படும்.
கணித பாடத்தை தெளிவாக புரிந்து கொள்ள, அபாகஸ் பயிற்சி, 1 லட்சம் ரூபாய்
மதிப்பில், நவீன அறிவியல் தொழிற்நுட்பத்தை அறிய, 'இன்ட்ராக்ட்டிங் ஒயிட்
போர்டு' மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 2016 - 17 ஜனவரியில்,
பள்ளிக்கு, ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்மாதிரி தலைமை ஆசிரியர் : 'அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்களின்
குழந்தைகளை, அரசு பள்ளியில் ஏன் படிக்க வைக்கக் கூடாது' என, உயர்
நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய துவக்கப்
பள்ளி தலைமையாசிரியர் செல்வகண்ணன், அவரது இரு மகள்களையும், இதே பள்ளியில்,
5ம் வகுப்பு வரை படிக்க வைத்துள்ளார்.
மூத்த மகள் பிரியதர்ஷினி, எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, தற்போது,
மருத்துவ மேற்படிப்புக்காக காத்திருக்கிறார். இளைய மகள் காவியதர்ஷினி பிளஸ்
2 படித்து வருகிறார். தலைமையாசிரியரின் முன்மாதிரியான நடவடிக்கையால், அரசு
பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதில், பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...