பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 2040ஆம் ஆண்டுக்குள் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் கார் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழல் மட்டுமின்றி மனித குலத்துக்கும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதனை தடுக்க பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹூலட் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாரீஸ் ஒப்பந்தத்தின்படி 2040 ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸில் பெட்ரோல் டீசல் வாகனங்கள் விற்பனை முடிவுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவது என்பது கடினம் தான் என்ற அவர் குறிப்பாக வாகன உற்பத்தியாளர்களுக்கு, கஷ்டமான ஒன்றாக இருக்கும் என்றும் புதிய சுற்றுச்சூழல் அமைச்சர் நிக்கோலஸ் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றும் அமைச்சர் நிக்கோலஸ் கூறியுள்ளார். வாகனங்களுக்காக பார்த்தால் மக்கள் வாழ முடியாது என்ற அவர், இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படும் என திட்டவட்டமாக கூறினார்.
பிரான்ஸ் அரசின் இந்த அதிரடி முடிவால் கார் உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசின் முடிவால் மக்கள் பெட்ரோல் டீசல் வாகனங்களை வாங்க தயக்கம் காட்டுவார்கள் என்பதால் விற்பனை பாதிக்கும் என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் அரசின் இந்த அறிவிப்பால் பல பேர் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் வாகன உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தயாரித்துள்ள வாகனங்களை எப்படி மாற்றுவது என்றும் கார் நிறுவனங்கள் யோசிக்க தொடங்கியுள்ளன.
இதனிடையே அரசின் அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே சுவீடனின் கார் நிறுவனமான ஜியான்ட் வால்வோ மின்சாரத்தில் ஓடும் கார்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இனி பெட்ரோல் டீசலில் இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...