சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதில் கல்வி என்பது மிகச் சிறந்த ஆயுதம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம், கஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு உள்ளே மட்டுமின்றி,
பள்ளிக்கு வெளியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேருந்து வசதிகூட இல்லாத மலைக்குன்றுகள் கொண்ட
குக்கிராமம் கஞ்சனூர். இங்கு வசிக்கும் அருந்ததி இன மக்களின் வாழ்வாதாரம்
உயர 1963-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது.
வறுமை காரணமாக குழந்தை களைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்,
குறிப்பிட்ட வயது வந்த வுடன் பெண் குழந்தைகளை திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட
பகுதிகளில் செயல் படும் நூற்பாலைகளுக்கும், ஆண் குழந்தைகளை செங்கல் சூளை
களுக்கும் வேலைக்கு அனுப்பினர். குத்தகை அடிப்படையில் பணத்தைப்
பெற்றுக்கொண்டு தோட்ட வேலைக்கும் குழந்தைகளை அனுப்பிவைத்தனர்.
பள்ளிக்கூடத்துக்கு மதிய உணவு நேரத்தில் மட்டும் கிழிந்த ஆடை களுடன்
மாணவர்கள் கையில் தட்டை வைத்துக்கொண்டு, குச்சியால் தட்டிக் கொண்டு
வருவார்கள். சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். இந்த தொடக்கப் பள்ளியில்
தங்களது குழந்தைகளை சேர்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள பலரும் தயக்கம்
காட்டினர். இதெல்லாம் நடந்தது 9 ஆண்டுகளுக்கு முன்பு.
ஆனால் இன்று.. அந்த பள்ளிக் கூடம்தான் சமூக மாற்றத்துக்கும்,
வளர்ச்சிக்கும் உதாரணமாக விளங்கு கிறது. ஐஎஸ்ஓ தரச்சான்றுடன் பல்வேறு
விருதுகளைப் பெற்ற நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந் துள்ளது. பள்ளியின்
வளர்ச்சிக்கு ஊர் பொதுமக்கள், பெற்றோர், கிராம கல்விக்குழு, பள்ளி
மேலாண்மைக்குழு பொறுப்பாளர்கள், முன்னாள் மாண வர்கள், இளைஞர்களின் கூட்டு
முயற்சியே முக்கிய காரணம். தவிர, இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்த
சாதனையின் பின்னணியில் இருப்பவர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.வீரமணி.
கிருஷ்ணகிரி மாவட்டம், கஞ்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பரந்து விரிந்த வளாகம்.
கஞ்சனூர் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 2007 ஜூலை மாதம் தலைமை ஆசிரியராகப்
பொறுப் பேற்றார் வீரமணி. அப்போது பள்ளியில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 28
மட்டுமே. இடைநிற்றல், நீண்ட நாள் பள்ளிக்கு வராதவர்கள் எண்ணிக்கை அதிக
அளவில் இருந்தது. கிராம மக்களும், தலைமை ஆசிரியரும் இணைந்து மாலை, இரவு
நேரங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தினர். பள்ளியின் வளர்ச்சி,
சமூக மாற்றத் துக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்தனர்.
முதல்கட்டமாக பள்ளிக்கான புதிய அமைவிட சூழல் உருவாக்க முடிவு
செய்யப்பட்டது. ‘அனைவருக்கும் கல்வி’ இயக்கம் (எஸ்எஸ்ஏ) மூலம்
மலையடிவாரத்தில் பள்ளிக்கான புதிய கட்டிடம் கடந்த 2008-09ல் கட்டப்பட்டது.
எஸ்எஸ்ஏ திட்டம் மூலம் பள்ளிக்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும்
ஏற்படுத்திய பிறகு, மாணவர்களின் கற்றல் திறனும் அதிகரிக்கத் தொடங்கியது.
சுற்றுவட்டார கிராம மக்களும் கஞ்சனூர் பள்ளியில் தங்களது குழந்தைகளை
சேர்க்க ஆர்வம் காட்டத் தொடங்கினர். ‘எஸ்எஸ்ஏ கல்வி நகர்’ என்ற பெயரில்
புதிய நகர் உருவானது.
தற்போது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட பள்ளியின் வளர்ச்சி குறித்து தலைமை ஆசிரியர் வீரமணி கூறியதாவது:
பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகு மாணவர்களின் சேர்க்கை
அதிகரித்தது. இப்போது மாணவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. இதில்
52 மாண வர்கள் கயிற்றுக்காரன் கொட்டாய், படப்பள்ளி, புதுகாடு, ராசிகாடு,
குரும்பர்தெரு, கூராக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வருகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால் பெற்றோர் ஒன்றிணைந்து அவர்களாகவே தனியாக வேன்
வசதி ஏற்படுத்தி, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.
மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையும்
வண்ணமயமான தோற்றத்துடன் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நூலகம்,
கணினி, யோகா, தொலைக்காட்சி, எல்சிடி அரங்கு, கேரம், சதுரங்கம், புத்தகப்
பூங்கொத்து அரங்குகள் போன்றவை செயல்பாட்டில் உள்ளன.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதார மான கழிவறைகள், சோலார் சிஸ்டம் மூலம்
மின்வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மூலிகை தோட்டம் போன்ற வசதிகளும்
உள்ளன. ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒவ்வொரு மாணவரது பெயரைச் சூட்டி, அவரவர்
தங்கள் மரக்கன்றுகளைப் பராமரித்து வளர்க்க, ஊக்கமளித்து பரிசுகள் வழங்கி
வருகிறோம்.
இப்பள்ளியில் 2013-14 முதல் ஆங்கில வழிக் கல்வி பிரிவு தொடங்கப்பட்டது.
தொடக்கப் பள்ளி 2015-16ல் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராம
மக்கள், பெற்றோர், இளைஞர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சந்தோஷ், கவுரி,
கலையரசி, உதவி ஆசிரியர்கள் லட்சுமி, கார்த்திக் ஆகியோரது அக்கறையும்,
ஆர்வமும்தான் பள்ளி, மாணவர்களின் வளர்ச்சிக்கு காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ்
மாவட்ட அளவில் சிறந்த பள்ளி, யுனிசெப் தங்கப்பதக்கம், முன்னு தாரணப் பள்ளி,
பசுமைப் பள்ளி உட்பட 6 விருதுகளை இப்பள்ளி பெற்றுள்ளது. 2014-15ம் ஆண்டு
முதல் தொடர்ந்து ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ், கல்வித் தரத்தில் ‘ஏ’ கிரேடு, மாநில
அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பசுமைப் பள்ளிக்கான முதல் பரிசு,
2015-16ல் காமராஜர் விருது என இந்தப் பள்ளிக்கு பல விருதுகள், பரிசுகள்
தொடர்ந்து கிடைத்து வருகின்றன. 2016-17ல் குழந்தை நேயப் பள்ளியாக இப்பள்ளி
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
விசாலமான வகுப்பறையில் கணினி கல்வி பயிலும் மாணவர்கள்.
முதல் தலைமுறையினர்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புவரை யிலும், இவ்வூரில் இருந்து ஒரு மாணவர்கூட
கல்லூரிக்குச் சென்ற தில்லை. அரசுப் பணியிலும் யாரும் இல்லை. இந்நிலையில்
இப்பள்ளி சார்பில் மேற்கொள்ளப்பட்ட விழிப் புணர்வு தொடர் நடவடிக்கைகளால்,
இடைநின்றவர்கள் நேரடியாக 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு
தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள் ளனர். பலர் கல்லூரிகளிலும்
சேர்ந்துள்ளனர். எம்பிஏ போன்ற தொழில்சார் படிப்புகளையும் தற்போது இந்த ஊர்
மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில்தான் இந்த கிராமத்தினர் முதல்
தலைமுறை பட்டதாரிகளைப் பார்க்கின்றனர்.
இதற்கிடையே, இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என
கிராம மக்கள் விரும்புகின்றனர். இதுபற்றி கருத்து தெரிவித்த கிராம மக்கள்,
‘‘8-ம் வகுப்புக்கு பிறகு 9, 10 வகுப்புகளுக்கு 6 கி.மீ தொலைவில் உள்ள
கல்லாவி அல்லது கெரிகேப்பள்ளி, 12 கி.மீ. தொலைவில் உள்ள ஊத்தங்கரைக்குச்
செல்லவேண்டி உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் மிகவும்
சிரமப்படுகின்றனர். எனவே கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை
உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்’’ என்றனர்.
தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 94430 57376.
publicity not necessary to good teacher
ReplyDelete