தமிழக பள்ளிக் கல்வித்துறை பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருப்பதையும்
அளப்பரிய மாற்றங்களை முன்வைத்து புதுமெருகு ஏற்றிக் கொண்டு வருவதையும்
அனைத்துத் தரப்பினரும் பெருமகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் என்பது பழைய
செய்தி.
கல்வியாளர்களின் சமூகச் செயற்பாட்டாளர்களின் பன்னெடுங்கால விமர்சனங்களையும் கருத்துகளையும் உள்வாங்கி பள்ளிக் கல்வித்துறை இம்மாற்றங்களை முன்னெடுத்துள்ளது.
இம்மாற்றங்களை எதிர்கொள்வதிலும் அதற்குத்தக வினையாற்றுவதிலும் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதே பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்துள்ளது.
"தனி மரம் தோப்பாகாது' என்பார்கள். நெடுங்கால வடிவத்தில், பாடத்திட்டத்தில், செயல்முறையில் பழக்கப்பட்டுவிட்ட ஓர் அமைப்பில் புதிய மாற்றங்கள் என்பது கடுமையான முயற்சியாகவே அமையும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. கல்வித்துறை இதற்கு ரத்தமும் சதையுமான எடுத்துக்காட்டு.
"சிஸ்டம் சரியில்லை' என்ற விமர்சனமே புதிய சோதனை முயற்சிகளை எதிர்த்துத் தள்ளி விடுகிறது. எனவேதான் துடிப்போடு கல்விச்சாலைகளில் அடியெடுத்து வைக்கும் இளம் ஆசிரியர்கள், தொடக்கத்தில் உற்சாகமாகச் செயல்படுவதும், பிறகு அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கிச் சிதைந்து, அமைப்பின் வடிவத்துக்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. இதற்கு விதிவிலக்குகள் இல்லாமலில்லை.
பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களிலும் துடிப்போடு, அயராது பரிசோதனை முயற்சிகளையும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இல்லாமல் இல்லை.
இப்போது வரலாறு புரண்டு படுத்திருக்கிறது. கல்வித்துறை அமைப்பே பல புதிய மாற்றங்களை முன்வைத்துச் செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகிறார்கள் என்பது ஆர்வமூட்டும் வினாவாக உள்ளது. இவ்வினாவுக்கான தேடுதலில் விடைகாணும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.
பள்ளிக் கல்வித்துறை இடைநிலை கற்றல், பயிற்சி முகாம்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடத்தியது. நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த, குறிப்பிட்ட பாடம் சார்ந்த ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கும் திட்டம் அது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப்பயிற்சி முகாம்களில் கல்வியாளர்கள், சமூக நோக்கர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களோடு உரையாடவும் உறவாடவும் ஒரு வாய்ப்பைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தியிருந்தது.
திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழாசிரியர்களுக்கான முகாமிலும் நெய்வேலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான முகாமிலும் கலந்துகொண்டு கருத்துரைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இரண்டு வேறுபட்ட கருத்தியல் மனோபாவம் சார்ந்த ஆசிரியர்களிடம் உரையாடியபோது, பள்ளிக்கல்வியின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை விசாலமாகியது.
தமிழர் கலை வரலாறு குறித்துத் தமிழாசிரியர்கள் மத்தியிலும் போலி அறிவியலும் நம்பிக்கையும் குறித்து அறிவியல் ஆசிரியர்கள் மத்தியிலும் உரையாடியபோது அவர்கள் காட்டிய உற்சாகம் கருத்துரைக்கும் நம்மையும் தொற்றியது.
குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அவர்கள் எழுப்பிய வினாக்கள் வழியாக வெளிப்பட்டது.
புதியனவற்றை அறியும் தேடலும் அதைத் தங்களது வகுப்பறைகளில் சோதித்துப் பார்க்கும் ஆர்வமும் மிகுந்தவர்களாக ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பது மகிழ்வளித்தது. இளம் ஆசிரியர்கள் மட்டுமல்ல, பணி அனுபவத்தில் மூத்த ஆசிரியர்களும் உற்சாகத்தோடு இருந்தார்கள். பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்கும் மாற்றங்கள் குறித்த பெருமிதம் அவர்களில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
தனியார் பள்ளிகளுக்குச் சவால்விட தங்களால் முடியும் என்றும் இனி அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை கொண்டு திரும்பும் என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுடனான தனிப்பட்ட உரையாடலில் வெளிப்பட்டது.
தமிழகமெங்கும் இப்பயிற்சி முகாம்களில் கருத்தாளர்களாகக் கலந்துகொண்ட பல எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் உற்சாகமாக இந்த வெளிப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டனர். "கல்வித்துறையின் உத்தரவால் கட்டாயம் உட்கார வேண்டியதாகிவிட்டது' என்ற கசப்பான உணர்வு அங்கு வெளிப்படவில்லை.
உரையாடலுக்குப் பிறகும் அரங்கினுள்ளும் அரங்கிற்கு வெளியிலும் கருத்தாளர்களைச் சூழ்ந்துகொண்டு கலைய மனமின்றி ஆர்வத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் முகங்கள், எதிர்காலக் கல்விக் கனவைத் தேக்கி வைத்திருந்தன.
அமைப்பே கெட்டிதட்டிப் போய் இருக்கிறது என்ற பன்னெடுங்காலக் கருத்து சிதைவுற்று அமைப்பே நெகிழ்வுத் தன்மையோடு உற்சாகமாக முன்னோக்கிப் பாய்கிறது என்பதை ஆசிரியர்கள் மிகவும் ஆரோக்கியமாக உள்வாங்கியுள்ளனர்.
அமைப்பின் அழுத்தத்தால் வீழ்த்தப்பட்டுச் சோர்வுற்றிருந்தாலும் மனசாட்சியின்படி சிறு சிறு ஆக்க முயற்சிகளைச் செய்துவந்த ஆசிரியர்கள் புது உற்சாகத்தோடு வீறுகொண்டு எழுந்திருக்கின்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் இதுபோன்ற பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து அவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியினைப் பள்ளிக் கல்வித்துறை செய்ய வேண்டும்.
கல்விசார் பரிசோதனை முயற்சிகளின் படிப்பினைகளை எடைபோட்டுப் பார்க்கும் இடமாகவும் புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, அம்முயற்சிகளை முன்னெடுத்துப் போகும் மேடையாகவும் இப்பயிற்சி முகாம்கள் வடிவெடுக்க வேண்டும்.
Good news and faithful
ReplyDeleteGood news and faithful
ReplyDelete