சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் முன்பு இருந்ததைவிட 20
சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பொறியியல்
கல்லூரிகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கட்டணம்
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும்
500 - க்கும் அதிமான சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்தக் குழு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டணத்தை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடும். இக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். அதற்கு மேல் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் பறிக்கப்படும்.
அதன்படி, கடைசியாக 2012- 13 கல்வியாண்டில் இந்தக் குழு கட்டணத்தை மாற்றியமைத்தது. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான தேசிய அங்கீகாரம் (என்.பி.ஏ.) இல்லாத படிப்புக்கு ரூ. 40 ஆயிரம் எனவும், என்.பி.ஏ. அங்கீகாரம் உள்ள படிப்புக்கு ரூ. 45 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதுபோல, நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள என்.பி.ஏ. அங்கீகாரம் இல்லாத மற்றும் அங்கீகாரம் உள்ள பொறியியல் படிப்புகளுக்கு ரூ. 70 ஆயிரம் என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, 2016- 17 கல்வியாண்டுக்கு இந்தக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், 2017- 18 கல்வியாண்டுக்கு இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, கட்டணப் பரிந்துரைகளை என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டியிடம், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்மையில் சமர்ப்பித்தன. அதனடிப்படையில், இந்தக் கல்வியாண்டுக்கு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டணத்தை மாற்றியமைத்து இந்தக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
20 சதவீதம் கட்டண உயர்வு: அதன்படி, கட்டணத்தை அதிகபட்சமாக 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பின்படி, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான என்.பி.ஏ. அங்கீகாரம் இல்லாத படிப்புக்கு ரூ. 50 ஆயிரம் எனவும், தேசிய அங்கீகாரம் உள்ள படிப்புக்கு ரூ. 55 ஆயிரம் எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுபோல், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள என்.பி.ஏ. அங்கீகாரம் இல்லாத படிப்புகளுக்கு ரூ. 85 ஆயிரம் எனவும், என்.பி.ஏ. அங்கீகாரம் உள்ள படிப்புகளுக்கு ரூ. 87 ஆயிரம் எனவும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, முன்பிருந்ததைவிட ரூ. 15 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எங்கு புகார் தெரிவிப்பது? நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டணத்தைவிட சுயநிதி கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், தொழில்நுட்ப கல்வி இயக்குநர், 53, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை - 600025 என்ற முகவரியில் எழுத்துப்பூர்வமாக மாணவர்கள் புகார் தெரிவிக்க வேண்டும். அல்லது, 044 - 22358119, 22357010 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...