''அரசு ஊழியர்களுக்கு, எட்டாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட, மூன்றாவது பேரவை கூட்டம், தர்மபுரி அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் சௌந்தரம் தலைமை வகித்தார்.
இதில், மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: தேசிய பென்ஷன் சட்டம், 2013ஐ ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட தொகையை, நான்கு லட்சம் ரூபாயாக உயர்த்தவேண்டும். ஓய்வூதியர்களையும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்கவேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள்,பஞ்., உதவியாளர்கள், வனக்காவலர்கள் ஆகியோருக்கு, வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக, 3,050 ரூபாய் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படிக்கு, 1,000 ரூபாய் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்ட உதவித்தொகையை, 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும், முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வரும் ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர் போராட்ட குழுவை, மாநில அரசு அழைத்து பேசி, மத்திய அரசு அறிவித்துள்ள, ஏழாவது ஊதியக் குழுவை மேம்படுத்தும் வகையில், எட்டாவது ஊதியக் குழுவிற்கு பரிந்துரைகளை, தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...