அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம்
இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.
அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 553 இன்ஜி.,
கல்லுாரிகளில், 1.68 லட்சம் இடங்களுக்கு, இந்த ஆண்டு மாணவர்கள்
சேர்க்கப்படுகின்றனர். இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 17ல் துவங்கியது.
தொழிற்கல்வி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கு,
மாணவர் சேர்க்கை முடிந்துள்ளது. இதில், 2,000 இடங்கள் நிரம்பிஉள்ளன.
மீதமுள்ள, 1.66 லட்சம் இடங்களை நிரப்ப, பொது கவுன்சிலிங் நாளை
துவங்குகிறது. அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும், இந்த கவுன்சிலிங்குக்கு,
'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். நாளை
முதல், ஆக., 11 வரை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்காக, மாணவர்களுக்கும்,
அவர்களுடன் வரும் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, பஸ் கட்டணத்தில்
சலுகை வழங்கப்படுகிறது. வெளியூர்களில் இருந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க,
முதல் நாளே சென்னைக்கு வரும் மாணவியர், தாய் அல்லது பெண் உறவினருடன்
வந்தால், அவர்கள் அண்ணா பல்கலை வளாகத்திலுள்ள விடுதியில் தங்க, இலவச இட
வசதி வழங்கப்படுகிறது.மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையம், கேன்டீன்,
கவுன்சிலிங் கட்டணம் செலுத்த, வங்கி கவுன்டர்கள், கடன் பற்றி தெரிவிக்க,
வங்கியின் விசாரணை அரங்குகள்.
அரசின் உதவித்தொகை தகவல் மையங்கள், 'அம்மா' குடிநீர் விற்பனை மையம்,
விசாரணை மையம் என, அண்ணா பல்கலை வளாகத்தில், சிறப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
கவுன்சிலிங்குக்கு வருவோர், காத்திருக்க பெரிய அரங்கம் அமைக்கப்படுகிறது.
இதில், நான்கு பெரிய, டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. காலியாக
இருக்கும், கல்லுாரி இட விபரங்கள், நேரடி ஒளிபரப்பாக, இணையதளம் மூலம்
திரையிடப்படும்.மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களில் ஏதாவது தகவலை கூடுதலாக
சேர்க்க வேண்டும் என்றால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு, இரண்டு
மணி நேரம் முன்பாக வந்து, திருத்தங்களை செய்து கொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...