கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்,
சென்னையில் புதிதாக விற்பனைக்கு வந்துள்ள எல்.இ.டி. பிரிண்ட் புத்தகப் பைகள் பள்ளி மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 7 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் புத்தகப்பைகள், காலணிகளின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தியாகராய நகர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பாடி, பெரம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள புத்தகப்பை, காலணிகள் கடைகளில் கடந்த சில நாள்களாக மாணவர்கள், பெற்றோர் கூட்டம் அலைமோதுகிறது. எல்.கே.ஜி. முதல் 5 -ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் 'ஆங்ரிபேர்டு', 'ஸ்பைடர்மேன்', 'டோரா புஜ்ஜி', 'ஸ்கூபிடூ', 'டொனால்ட் டக்' போன்ற கார்ட்டூன் சித்திரங்கள் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த வகையான பைகள் தரத்திற்கேற்றவாறு ரூ.350 முதல் ரூ.600 வரை விற்கப்படுகின்றன. அதேபோல் இடைநிலை, உயர்நிலை வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை புத்தகப் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன. நிகழாண்டில் 'எல்.இ.டி. பிரிண்ட்' புத்தகப் பைகள் குழந்தைகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தப்பையின் முகப்பில் நவீன தொழில்நுட்பத்தில் அழகிய வடிவமைப்பில் பல்வேறு கார்ட்டூன் சித்திரங்கள் எல்.இ.டி. தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை பாடியில் உள்ள ஒரு கடையின் புத்தகப்பை விற்பனைப் பிரிவு நிர்வாகிகள் புதன்கிழமை கூறியது: புத்தகப் பைகளைப் பொருத்தவரை குழந்தைகளின் விருப்பம், எதிர்பார்ப்பு அடிக்கடி மாறிக் கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு புதிய வகையான புத்தகப் பைகளை விற்பனை செய்து வருகிறோம். எல்.இ.டி. பிரிண்ட் புத்தகப் பைகள் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற இடங்களிலிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வருகின்றன. இந்தப் பையில் உள்ள சித்திரங்களை எங்கிருந்து பார்த்தாலும் அந்த உருவங்கள் நம்மை நோக்கிப் பார்ப்பது போன்று தெரியும். இந்தப் பைகளை நன்கு பயன்படுத்திய பிறகு கிழிந்தால்கூட இதிலிருந்து எல்இடி பிரிண்ட்டை எடுத்து வேறு பைகளில் ஒட்டிக் கொள்ளலாம். ரூ.500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது. பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு இந்த வகையான பைகளையே அதிக அளவில் தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.'நம்பர் லாக்' புத்தகப் பைகள் அதேபோன்று மழை ஆடையுடன் (rain coat) கூடிய பைகள், குறிப்பிட்ட எண்ணை அடையாளமாகக் கொண்டு பூட்டிக் கொள்ளும் வசதி கொண்ட 'நம்பர் லாக்' புத்தகப் பைகள், மதிய உணவு பாத்திரம், மெல்லிய ஏடுகள் வைத்துக் கொள்ள வசதிகள் கொண்ட பைகளும் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வகையான பைகள் ரூ.750 முதல் ரூ.1,100 வரை விற்கப்படுகின்றன. கடந்தாண்டைக் காட்டிலும் மூலப்பொருள்களின் விலையும், தையல் கூலியும் உயர்ந்துள்ளதால் இந்தாண்டு புத்தகப்பைகளின் விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றனர் அவர்கள். இதேபோன்று, எல்.இ.டி. பிரிண்ட் முறையிலான குழந்தைகளுக்கான காலணிகள் ரூ.300 முதல் ரூ.600 வரையில் விற்கப்படுகின்றன. மேலும், சீருடைக்கு ஏற்றவாறு அணியும் வகையில் செல்குரோ, லேஸ், சின்தெடிக் லெதர் உள்பட பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட காலணிகள் (ஷூ) சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரத்யேக ஷோரூம்கள், கடைகளில் ரூ.400 முதல் ரூ.900 வரை விற்கப்படுகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...