ஐ.ஐ.டி.,யில் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், ஹரியானா மாணவர்,
தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கேரள மாணவர், தென் மண்டல அளவில்
முதலிடம் பிடித்துள்ளார்.
ஐ.ஐ.டி.,யில் படிக்க, ஜே.இ.இ., பிரதான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற,
பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே, 21ல்
நடத்தப்பட்டது. சென்னை - ஐ.ஐ.டி., நடத்திய, இந்த தேர்வின் முடிவுகள் நேற்று
வெளியாகின. மொத்தம், 1.72 லட்சம் பேர் விண்ணப்பித்து, 1.59 லட்சம் பேர்,
தேர்வில் பங்கேற்றனர். அவர்களில், 50 ஆயிரத்து, 455 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர். இதில், ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவை சேர்ந்த மாணவர் சர்வேஷ்
மேத்தானி, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். ஐ.ஐ.டி.,யின் மண்டல
அளவில், தென் மண்டலமான சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவு செய்த மாணவர்களில், கேரள
மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்த, ஷகில் மாஹின், தேசிய அளவில் நான்காம்
இடமும், மண்டல அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவில்,
ஐதராபாத்தை சேர்ந்த ரம்யா நாராயணசாமி என்ற மாணவி, பொது பட்டியலில் தேசிய
அளவில், 35ம் இடத்தையும், பெண்கள் பிரிவில், தேசிய அளவில்
முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
தேர்ச்சி விபரங்கள் வருமாறு:
● ஐ.ஐ.டி.,யின் ஏழு மண்டலங்களில், சென்னை - ஐ.ஐ.டி., மண்டலத்தில்
அதிகபட்சம், 10 ஆயிரத்து, 240 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில், 90
சதவீதத்திற்கு மேற்பட்டோர், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவை
சேர்ந்தவர்கள்
● ஐ.ஐ.டி., - மும்பை
மண்டலத்தில், 9,893 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
ஐ.ஐ.டி., - டில்லி, 9,207; ஐ.ஐ.டி., - கான்பூர், 6,809; கரக்பூர், 6,138;
ரூர்க்கி, 5,050; குவகாத்தி, 3,118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
● 'டாப் - 10' பட்டியலில், 10 பேர்; 'டாப் - 100'ல், 100 பேர்; 'டாப் - 500'ல், 500 பேர்; இடம் பெற்றுள்ளனர்.
தலித் மாணவர்கள் 'டாப்'
ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில், ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டின் படி,
தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்ச்சி சதவீதத்தில், ஆதிதிராவிட
மாணவர்கள், 54 சதவீதம் தேர்ச்சி பெற்று, முதலிடத்தில் உள்ளனர்.
பழங்குடியினர், 47 சதவீதத்துடன் இரண்டாம் இடம்; பொதுப்பிரிவினர், 34
சதவீதத்துடன் மூன்றாம் இடம் மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிக
பிற்படுத்தப்பட்டோரில், 15 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தில் உள்ளனர்.
எண்ணிக்கை அடிப்படையில், பொதுப்பிரிவு மாணவர்கள், 23 ஆயிரத்து, 390 பேர்
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிட மாணவர்கள், 13 ஆயிரத்து, 312 பேர்
தேர்ச்சி பெற்று, இரண்டாம் இடத்தில் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, மிக
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 9,043 பேர் தேர்ச்சி பெற்று, மூன்றாம்
இடத்திலும், பழங்குடியின மாணவர்கள், 4,710 பேர் தேர்ச்சி பெற்று, நான்காம்
இடத்திலும் உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...