2018-19 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே. சதுர்வேதி கூறியதாவது, “தற்போதுள்ள நடைமுறைப்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு மேல்
நடத்தப்படுகின்றன. இதற்கான முடிவுகள் மே மூன்றாம் அல்லது நான்காவது வாரத்தில்தான் அறிவிக்கப்படுகின்றன. இது கோடைகால விடுமுறையின் தொடக்கத்தோடு ஒத்திருக்கிறது. எனவே பல ஆசிரியர்கள் அந்த நேரத்தில் விடுப்புக்குச் செல்கின்றனர். இதன் காரணமாக, மதிப்பீட்டிற்காக ஒப்பந்த ஊழியர்களைப் வைத்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் சூழல் உள்ளது. இதனால் விடைத்தாள் திருத்தத்தில் தவறுகளும், குழப்பமும் ஏற்படுகிறது.
எனவே தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் அனுபவம் பெற்ற ஆசிரியர்களை வைத்தே விடைத்தாள்களைத் திருத்த முடியும். அதன்படி “பிழை இல்லா மதிப்பீட்டு” முறையைச் செயல்படுத்த முடியும். இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு இந்த முறை உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார். எனவே அடுத்த கல்வியாண்டு முதல் பிப்ரவரி-15 ஆம் தேதி பொதுத்தேர்வினை தொடங்கி ஒரு மாதத்திற்குள் முடிக்கும் வகையில் திட்டமிட்டு வருவதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய கல்வி வாரியத்தின் மதிப்பீட்டு முறைகளில் குறிப்பிட்ட மாற்றங்களைக் கொண்டு வர தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த பலருக்கும், குறைந்த மதிப்பெண் போடப்பட்டது தெரியவந்தது. அதாவது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்ணையும் மறு கூட்டலில் போடப்பட்ட மதிப்பெண்ணையும் ஒப்பிடுகையில் 100 முதல் 400 சதவிகிதம் இடைவெளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...