மதுரை, 'நீட்' தேர்வை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்,
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடக்கோரி, உயர் நீதிமன்ற
மதுரைக் கிளையில், மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை ஜொனிலா உட்பட, 10 மாணவர்கள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்
மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். அதில் அவர்கள்
கூறியிருந்ததாவது:'இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும்
நுழைவுத் தேர்வு, மே 7ல் நடந்தது. அனைத்து மாநிலங்களிலும், ஒரே மாதிரியான
வினாக்கள் இடம்பெறவில்லை. தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். மே
7ல் நடந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஒரே மாதிரியான வினாத்தாள்
அடிப்படையில், 'நீட்' மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில்
குறிப்பிட்டு இருந்தனர்.
இதை ஏற்று, 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதித்து,
விசாரணையை ஜூன் 12க்கு நீதிபதி எம்.வி.முரளிதரன்
ஒத்திவைத்தார்.இந்நிலையில், புதுக்கோட்டையை ஜெரோபோ கிளாட்வின்,
உயர்நீதிமன்ற கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,
'பிளஸ் 2 வில், 1,177 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'நீட்' தேர்வு வினாக்கள்,
ஒரே மாதிரியாக இடம்பெறாததால், அதனடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கு
தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய முடியாது. 'நீட்' தேர்வை ரத்து செய்து,
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த,
மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்'
என குறிப்பிட்டு இருந்தார். மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...